ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய வீனஸ் வில்லியம்ஸ்!!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான, ஆஸ்திரேலியவின் ஓபன் டென்னிஸ் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஓர் ஆண்டில் மொத்தம் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறும்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரானது, மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலகின் 5 ஆம் நிலை வீரரான வீனஸ் வில்லியம்ஸ் சுவிட்சர்ந்துலாந்தின் இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் பலப்பரிட்சை நடத்தினர்.
எதிபார்த்ததைவிட மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் இருந்தே வீனஸ் வில்லியம்ஸ் பின்வாங்க துவங்கினார். வீனஸ் வில்லியம்ஸ்க்கு கடும் சவால் அளித்த பென்சிக், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வீனஸ் வில்லியம்ஸ்க்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நடப்பு சாம்பியனும், ஆஸ்திரேலியாவில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முழு உடல் தகுதியுடன் இல்லை என்று கூறி இந்த முறை போட்டியிலிருந்து விலகி விட்டார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், மகளிர் இரட்டையர் பிரிவில் கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் பட்டம் வென்றவருமான இந்தியாவின் சானியா மிர்ஸா, இந்த ஆண்டு காயம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
மேலும், இங்கிலாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவும், தொடர்ந்து 2 முறை ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவும் காயம் காரணமாக இந்த முறை ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிபிடதக்கது.