இந்திய அணியும் சனி பெயர்ச்சியும்... இத்தனை வீரர்களுக்கு காயமா... மீள்வது எப்போது?
India National Cricket Team: இந்திய அணியில் தற்போது காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
India National Cricket Team: இந்திய அணிக்கு இந்த காலகட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய வீரர்களை வைத்து ஒரு நேரத்தில் டி20, ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அளவிற்கு திறன் மிகுந்த அணியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. எனினும், ஐசிசி கோப்பை தாகம் என்பது இந்திய அணிக்கு இந்தாண்டும் கைநழுவிப்போனது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனலாம்.
இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, கோப்பையை தவறவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் (Team India) ஐசிசி கோப்பைக்கான போராட்டம் அடுத்த வருடம் வரை நீடிக்கிறது எனலாம். அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் கரீபியன் தீவுகளிலும், அமெரிக்காவிலும் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இந்திய அணியின் அடுத்த குறி டி20 உலகக் கோப்பைதான் எனலாம். கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த உடனேயே அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான அணியை தயார் செய்யும் முனைப்பில் பிசிசிஐ இறங்கியது.
மேலும் படிக்க | தோனியின் தவறால் முடிவுக்கு வந்த சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை..!
குறிப்பாக, கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா, ஷமி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவே இல்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று வந்தார். தற்போது நடந்து முடிந்த ஓடிஐ உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார்.
தற்போது இந்திய அணியே சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டாலும், பல வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளது, நிலைமை இன்னும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. அந்த வகையில், இந்திய அணியில் தற்போது காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
ஹர்திக் பாண்டியா
ஓடிஐ உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது, ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya Injury) கணுக்காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தொடரில் இருந்தே விலகினார். இதுவரை அவர் காயம் குறித்த முழு தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதனால், இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய அணி மட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கும் பெரும் சிக்கல் உள்ளது. அவரை குஜராத் அணயில் இருந்து வாங்கிய மும்பை இந்தியன்ஸ், உடனடியாக கேப்டன் பொறுப்பை கொடுத்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
முகமது ஷமி
நடந்து முடிந்த ஓடிஐ உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷமிதான் (Mohammed Shami Injury). வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். அவரிந் சராசரி 10.71 ஆகவும் இருந்தது. அவருக்கும் தற்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்த அவர் தற்போது காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 33 வயதான அவர் எப்போது காயத்தில் இருந்து மீள்வார் என தெரியாதது இந்திய ரசிகர்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad Injury) மூன்று பார்மட்டுக்கான வீரராக தற்போது உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 தொடரில் முழுநேர ஓப்பனராக கலக்கிய ருதுராஜ், தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சுப்மான் கில்லின் வரவால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும், ஒருநாள் தொடரில் இடம்பெற்ற ருதுராஜ் முதலிரண்டு போட்டிகளில் விளையாடினார். இரண்டாம் போட்டியில் வலது மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மூன்றாவது டி20 தொடரில் விளையாடவில்லை, வரும் டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் விலகி உள்ளார். மேலும் அவருக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் ஏற்பட்ட காயத்தால் தற்போது அவதிப்பட்டு வருகிறார். வரும் ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பின் ஐபிஎல் போட்டிதான் உள்ளது என்பதால் அதற்குள் அவர் தயாராகிவிடுவார் என தெரிகிறது. ஐபிஎல் போட்டிக்கு பின்னரே டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ