தோனி தூக்கப்போகும் அந்த மூன்று வீரர்கள் யார் யார்?... சிஎஸ்கேவின் முக்கிய தேவைகள்!
IPL Auction 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தேவைகளையும், வரும் ஏலத்தில் எந்த வீரர்களை எடுத்து அந்த தேவைகளை பூர்த்தி செய்ய இருக்கிறது என்பதையும் இதில் காணலாம்.
IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) அடுத்தாண்டு கோடை காலத்தில்தான் நடைபெற உள்ளது, ஆனால் தற்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது. அதற்கு காரணம், ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. மேலும், டிச. 12ஆம் தேதி அணிகளுக்கான டிரேடிங் வாய்ப்பு திறந்தே இருக்கும் என்பதால் எந்த அணிகள், எந்தெந்த வீரர்களை டிரேட் செய்ய உள்ளது என்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக, ஐபிஎல் ஏலத்தை (IPL Auction) முன்னிட்டு 10 அணிகளும் இந்தாண்டில் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐயிடம் சமர்பித்தது. இதில், ஹசில்வுட் (ஆர்சிபி), ஹசரங்கா (ஆர்சிபி), பென் ஸ்டோக்ஸ் (சிஎஸ்கே), பெட்டோரியஸ் (சிஎஸ்கே), ஆர்ச்சர் (மும்பை), ஷர்துல் தாக்கூர் (கேகேஆர்), பெர்குசன் (கேகேஆர்) பல முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் சிலர் ஏலத்திற்கு வருவார்கள், ஸ்டோக்ஸ் போன்று வரும் சீசனில் விளையாட விரும்பாதவர்கள் அல்லது காயத்தால் அவதிபடுபவர்கள் ஏலத்தில் பங்கேற்க மாட்டார்கள்.
குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) இப்போது மும்பை அணிக்கு (Mumbai Indians) திரும்பி உள்ளது, கேம்ரூன் கிரீனை ரூ.17.50 கோடி கொடுத்து ஆர்சிபி மும்பையிடம் இருந்து டிரேட் செய்தது என ஏலத்திற்கு முன்னரே பரபரப்பு பரவிவிட்ட நிலையில், ஏலம் நெருங்க நெருங்க இன்னும் விறுவிறுப்பு அதிகமாகும். அந்த வகையில், வரும் ஏலத்தில் எந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கும் என்பதை அவர்களின் ரசிகர்கள் இப்போதே கணக்குப் போடத் தொடங்கியிருப்பார்கள். இந்நிலையில், ஐந்து முறை சாம்பியனும், தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் முக்கிய தேவைகளும், ஏலத்தில் எந்த வீரர்களை எடுத்து அந்த தேவைகளை பூர்த்தி செய்ய இருக்கிறது என்பதையும் இதில் காணலாம்.
1. இந்திய பேட்டர்
ராயுடு கடந்த தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவரும் இந்த ஏலத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் எந்த இந்திய பேட்டரை சிஎஸ்கே நிரப்ப உள்ளது என்ற கேள்வி உள்ளது. இதில் முன்னணியில் வருபவர்களில் மனீஷ் பாண்டே மற்றும் ஷாருக் கான்.
மனீஷ் பாண்டே
மனீஷ் பாண்டே (Manish Pandey) கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி உள்நாட்டு தொடர்களில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், அது சிஎஸ்கேவிற்கு பெரிய பிரச்னையாக இருக்காது. வீரர்களின் முழு திறனையும் ஆட்டத்திற்குள் கொண்டு வருவதில் வல்லவர்கள் சிஎஸ்கே என்பதை அனைவரும் தெரிந்திருப்பார்கள். வாட்சன், உத்தப்பா, ராயுடு, ரஹானே என சமீபத்திய உதாரணங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ராயுடு போன்று அதிரடி வீரர் இல்லாவிட்டாலும் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் பெயர் பெற்றவர் மனீஷ்.
ஷாருக் கான்
தமிழ்நாட்டை சேர்ந்த ஷாருக் கானை (Shahrukh Khan) மெகா ஏலத்திலேயே சிஎஸ்கே எடுக்க அதிக ஆர்வம் காட்டியது. ஏலத்தில் பஞ்சாப் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடந்த அந்த மோதலில் ஷாருக் கான் பஞ்சாப் வசமானார். தற்போது ராயுடு இல்லாத இடத்தை நிரப்ப ஷாருக் கானும் நல்ல தேர்வாக இருப்பார். ஆனால், இவரை எடுப்பதில் சிஎஸ்கேவுக்கு ஏலத்தில் பெரிய சிக்கல் இருக்கும். ரூ.32.4 கோடி வரை சிஎஸ்கே வைத்திருப்பதால் நிச்சயம் பெரிய தொகை கொடுத்தும் கூட இவரை எடுக்கலாம். தோனி பட்டறையில் இவரை காண பலரும் காத்திருக்கின்றனர். இந்த பட்டியலில் கருண் நாயரும் இதில் ஒரு ஓரமாக பேசப்படுகிறார்.
2. வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்
பென் ஸ்டோக்ஸ் கடந்த தொடரிலேயே பெரிதாக விளையாடமல் போனாலும் ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் சிஎஸ்கேவுக்கு நிச்சயம் தேவை. தென்னாப்பிரிக்க வீரர் பெட்டோரியஸ் கூட சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களில் ஜேசன் ஹோல்டர், ரோவ்மேன் பாவேல், ஓமர்ஸாய், கம்மின்ஸ் ஆகியோரை சிஎஸ்கே வாங்கலாம் என பேச்சுகள் அதிகம் உள்ளது. இதில் கம்மின்ஸ், ஓமர்ஸாய் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் அதிகம் உள்ளது.
ரோவ்மேன் பாவேல்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும், சிஎஸ்கேவுக்கும் இருக்கும் தொடர்பை நாம் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், அது டிஜே பிராவோவுக்கு பின் அந்த உறவில் சற்று பின்னடவு இருப்பதாக பலருக்கும் தோன்றும். அதனால், அந்த வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் இடத்திற்கு மேற்கு இந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் ரோவ்மேன் பாவேலை சிஎஸ்கே எடுக்கலாம். டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ நிச்சயம் விடமாட்டார் எனலாம்.
ஜேசன் ஹோல்டர்
இந்தியாவில் அதிகம் விளையாடி பரிட்சையப்பட்டவர்களின் ஹோல்டரும் ஒருவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வந்த இவரின் கிராஃப் இப்போது பின்னடைவை சந்திருப்பது உண்மைதான். ஆனால், முன்பு சொன்னதுபோல் இது சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது. இவரின் அதிரடி ஷாட்களும், டெத் ஓவர் பௌலிங்கும் சிஎஸ்கேவுக்கு பயன்பெறும் வகையில் பிராவோ பார்த்துக்கொள்வார் எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், ஹோல்டர் ஐபிஎல் தொடருக்கு அறிமுகமானதே 2013இல் சிஎஸ்கே அணியில்தான்.
3. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்
கைல் ஜேமீசன் மற்றும் அவருக்கு மாற்று வீரராக வந்த மகாலா ஆகியோரை சிஎஸ்கே விடுவித்துள்ளது. எனவே, வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என்பதும் சிஎஸ்கேவின் முக்கிய தேவைகளுள் ஒன்று. இதில், ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer), ஜோஷ் ஹசில்வுட், பெர்குசன் போன்றோர் வருகின்றனர். இதில் ஹேசில்வுட் சிஎஸ்கே அணிக்கு ஏற்கெனவே விளையாடிவர் என்பதாலும், அவர் ஐபிஎல் ஏலத்திற்கு வருவது இன்னும் உறுதியாகாதது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஸ்டார்க் ஏலத்தில் வந்தால் அவரை எடுக்கவும் சிஎஸ்கே தயங்காது, காரணம் சிஎஸ்கே ரூ.32.4 கோடியுடன் ஏலத்தை எதிர்கொள்ள உள்ளது. இதில் ஆர்ச்சர், பதிரானாவுடன் டெத் ஓவருக்கு கைக்கொடுக்கலாம். பெர்குசன் இந்த உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியபோது அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அவர் சிஎஸ்கேவுக்கு பொருத்தமானவர் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ