India National Cricket Team: இந்திய அணி அதன் நீண்ட டெஸ்ட் சீசனை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று இந்தியா இந்த டெஸ்ட் சீசனை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது. இன்னும் சொந்த மண்ணில் இந்தியா, நியூசிலாந்து உடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. அதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இந்தியா விளையாட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (ICC World Test Championship Final 2025) இந்திய அணி தகுதிபெற இன்னும் மூன்று போட்டிகளில் வென்றாலே போதுமானது எனலாம். தற்போது வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. எனவே, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, முதல்முறையாக கோப்பையை தட்டித்தூக்க ரோஹித் - கம்பீர் ஜோடி காத்துக்கொண்டிருக்கிறது.


WTC பைனல் 2025


இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டிக்கு தகுதிபெற தற்போதைக்கு இந்த மூன்று அணிகளுக்கே அதிக வாய்ப்புள்ளது. ஒன்று இந்திய அணி (Team India) மற்ற இரண்டு அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முட்டிமோதும் எனலாம். இதில் இந்தியா நியூசிலாந்தை எப்படியாவது 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்யவும் திட்டமிட்டு வருகிறது. அதை தாண்டி அடுத்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் (Border Gavaskar Trophy) கைப்பற்ற இந்தியா இப்போதிருந்தே தயாராகி வருகிறது.


மேலும் படிக்க | IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?


2018, 2020 ஆகிய இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. எனவே, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்ல இந்திய அணி போராடும். கடந்த முறையே இந்திய அணி அங்கு சென்று கடுமையாக போராடி கோப்பையை தனதாக்கியது எனலாம். அந்த தொடரில் விராட் கோலி முதல் போட்டியை மட்டுமே விளையாடினார். அவரது முதல் குழந்தை பிறப்பதையொட்டி அவர் நாடு திரும்பியதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கு ரஹானே வழிநடத்தி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றார். அந்த தொடரில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் என பல இளம் வீரர்களுக்கு அந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. 


பார்டர் கவாஸ்கர் கோப்பை


அப்படியிருக்க இந்த முறை நவம்பர் - டிசம்பர் - ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது தற்போதே ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, சிராஜ் ஆகியோர் உறுதியாக இடம்பெறுவார்கள். அதேநேரத்தில் ஷமியும் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறும் வாய்ப்புள்ளது. ஆகாஷ் தீப், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா இருக்குமிடத்தில் இன்னொருவருக்கான வாய்ப்பில்லை. இருந்தாலும் பேக்அப்பாக அக்சர் பட்டேல் சேர்க்கப்படலாம். 


பேட்டிங்கை பொறுத்தவரை மிடில் ஆர்டரில் சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் உள்ளிட்டோருக்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதில் கடைசி இருவர் பேக்அப் வீரர்கள். ஓப்பனிங்கில் ஜெய்ஸ்வால் - ரோஹித் ஆகியோருக்கு பேக்அப்பாக யாரை அழைத்துச்செல்வார்கள் என்பது பெரிய விவாதமாக உள்ளது. இதில், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு (Ruturaj Gaikwad) அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது. தற்போது இரானி கோப்பை போட்டியில் ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பை அணிக்கு எதிராக அபிமன்யூ ஈஸ்வரன் 191 ரன்களை குவித்து அசத்தி உள்ளார். எனவே, தொடக்க பேட்டராக இந்திய அணிக்கு இருவரில் யார் செல்ல இருக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது பலமாகி உள்ளது.


ருதுராஜ் கெய்க்வாட் vs அபிமன்யூ ஈஸ்வரன்


இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran) ஆகியோரின் புள்ளிவிவரங்களை இங்கு காணலாம். ருதுராஜை விட அபிமன்யூ ஈஸ்வரன் அனுபவ வீரர் ஆவார். சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் இருவரின் பார்மை ஒப்பிட்டு பார்த்தால் அதிலும் அபிமன்யூ ஈஸ்வரன்தான் முன்னணியில் உள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன் 6 இன்னிங்ஸில் மூன்று சதங்கள் உள்பட 500 ரன்களை குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ரன்கள் 191 ஆகும். சராசரி 100 ஆக உள்ளது. மறுபுறம், ருதுராஜ் கெய்க்வாட் 7 இன்னிங்ஸில் 2 அரைசதங்கள் உள்பட 241 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 62 ஆகும். சராசரியும் 34.43 ஆகத்தான் உள்ளது. 


அதேபோல் மொத்த உள்ளூர் போட்டிகளை கணக்கில் எடுத்தால் அபிமன்யூ 167 இன்னிங்ஸில் 7 ஆயிரத்து 506 ரன்களை 49.38 என்ற சராசரியில் குவித்துள்ளார். இதில் 29 அரைசதங்கள், 26 சதங்கள் அடக்கம் அதிகபட்சமாக 233 ரன்களை அடித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் 56 இன்னிங்ஸில் 2,282 ரன்களை 42.26 என்ற சராசரியில் அடித்துள்ளார். அதில் 12 அரைசதங்கள், 6 சதங்கள் அடக்கம், அதிகபட்சமாக 195 ரன்கள். இப்படியிருக்க ஆஸ்திரேலியா தொடரில் மட்டுமின்ற வரவிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். 


மேலும் படிக்க | இந்தியா, வங்கதேசம் டி20 தொடர் ; நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் இலவசமாக பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ