கொல்கத்தாவை கொத்துக் கறி போட்ட பஞ்சாப்... டி20 வரலாற்றிலேயே இதுதான் வெறித்தனமான சேஸிங்!
KKR vs PBKS Highlights: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி அமைத்த 262 ரன்களை இலக்கை 8 பந்துகள் மிச்சம்வைத்து பஞ்சாப் அணி அடித்து சாதனை படைத்துள்ளது.
KKR vs PBKS Highlights: நடப்பு 17ஆவது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த சீசன் பேட்டர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது எனலாம். 20 ஓவர்களில் 187 ரன்கள், பவர்பிளேவிலேயே 100 ரன்களுக்கும் மேல் அடிக்கப்படுகிறது என இந்த ஐபிஎல் சீசனில் ரன் மழையும், சிக்ஸர் மழையும் பொழிந்து வருகிறது எனலாம்.
பவர்பிளேவிலேயே மிரளவைத்த பஞ்சாப்
அதேதான் இன்றைய போட்டியிலும் நடைபெற்றது. டாஸை வென்று முதலில் பந்துவீச பஞ்சாப் முடிவெடுத்தது. முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா அணியின் பேட்டர்களும் ரன் மழை பொழிந்தனர். கேகேஆர் ஓப்பனர்கள் சுனில் நரைன், பில் சால்ட் ஆகியோர் பவர்பிளேயிலேயே 76 ரன்களை அடித்து மிரட்ட, பஞ்சாப் அணியின் ஓப்பனர்களான பிரப்சிம்ரன் சிங் - பேர்ஸ்டோவ் ஆகியோர் பவர்பிளேவில் 93 ரன்களை அடித்து இன்னும் மிரளவைத்தனர் எனலாம்.
KKR vs PBKS: ஸ்பின்னர்கள் ஓர் ஒப்பீடு
இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிக பரிதாபமான நிலையில் இருந்தனர். இருப்பினும், பஞ்சாப் அணியில் ராகுல் சஹார் மிடில் ஓவர்களில் சற்று கைக்கொடுத்தார். அவர் 4 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். ஹர்பித் பிரார் 2 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்தார். இதன்மூலம், பஞ்சாப் ஸ்பின்னர்கள் 6 ஓவர்களில் 54 ரன்களை கொடுத்திருந்தனர்.
மேலும் படிக்க | ரன்களை வாரி வழங்கி பர்பிள் கேப்பை கைப்பற்றிய பஞ்சாப் பௌலர் - கலாய்க்கும் ரசிகர்கள்!
மறுபுறம் கேகேஆர் அணியில் சுனில் நரைனும் சிறப்பாகவே வீசியிருந்தார். அவர் 4 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்திருந்தார். அதிலும் பவர்பிளேவில் அவர் வீசிய 1 ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது, அடுத்த 3 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டும் அவர் ஓவரில் அடிக்கப்பட்டது. ஆனால், கேகேஆர் அணியின் மற்ற ஸ்பின்னர்களான வருண் சக்ரவர்த்தி 3 ஓவர்களில் 46 ரன்களையும், அன்குல் ராய் 2 ஓவர்களில் 36 ரன்களையும் என 5 ஓவர்களில் 82 ரன்களை கொடுத்தனர். பனி அதிகமாக இருந்ததும் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், மிடில் ஓவர்களில் பஞ்சாப் ஆதிக்கம் செலுத்த கேகேஆர் ஸ்பின்னர்கள் சொதப்பியதும் முக்கிய காரணம்.
கடைசி ஓவரில் சொதப்பிய கேகேஆர்
கொல்கத்தா அணியில் சால்ட், நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரஸ்ஸல் என அனைவருமே ரன்களை பொழிந்தாலும் கடைசி ஓவரில் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால், பஞ்சாப் அணியில் யாருமே அப்படி விளையாடவில்லை. பவர்பிளேவில் பிரப்சிம்ரன் பட்டாசாக வெடித்து, 6வது ஓவரின் கடைசி பந்தில் ரன்அவுட்டானார். அவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். ரூசோவும் கூட 16 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க சேஸிங்
அடுத்து வந்த ஷஷாங்க் சிங்தான் பஞ்சாப் அணியை, ஜானி பேர்ஸ்டோவ் உடன் சேர்ந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதுவும் 8 பந்துகள் மிச்சம் இருக்க பஞ்சாப் அணி 262 ரன்கள் என்ற பெரிய இலக்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஈஸியாக கடந்தது. இதுதான் ஐபிஎல் வரலாற்றிலும் சரி, டி20 வரலாற்றிலும் சரி அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன், சென்சூரியன் நகரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 259 ரன்கள் இலக்கை அடித்ததே அதிகபட்ச சேஸிங்காக இருந்தது.
பஞ்சாப் சிக்ஸரிலும் சாதனை
ஜானி பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 108 ரன்களையும்; ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 68 ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் அணி பேட்டிங்கில் 24 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இதுதான் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்களாகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிராகவும், ஆர்சிபி அணிக்கு எதிராகவும் தலா 22 சிக்ஸர்களை ஒரு இன்னிங்ஸில் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும் படிக்க | 'Dream 11 ஒரு மோசடி செயலி...' லட்சக்கணக்கில் ரூபாயை பறிகொடுத்த நபர் - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ