மீண்டும் கேப்டனாகும் ரோஹித்? - இப்போதே மும்பை அணி கொடுத்த பெரிய சிக்னல்!
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாகும் வாய்ப்பு தற்போது பிரகாசமாக தெரிகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Mumbai Indians, IPL 2025: ஐபிஎல் 2025 சீசனை கிரிக்கெட் உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது. தோனி மீண்டும் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு மைதானத்தில் என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, 2025 சீசனுக்கு முன் ஐபிஎல் மெகா ஏலமும் (IPL 2025 Mega Auction) நடைபெற இருப்பதால், 10 அணிகளும் கடந்த சீசனில் இருந்து பல மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறது.
அணிகள் 6 வீரர்களை ஏலத்திற்கு முன்னரும் தக்கவைக்கலாம், ஏலத்தில் RTM பயன்படுத்தியும் தக்கவைக்கலாம். வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் என எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனால் நிச்சயம் அதிகபட்சமாக 5 Capped வீரர்களைதான் எடுக்க முடியும். அதேபோல் குறைந்தபட்சம் 1 Uncapped வீரரையாவது தக்கவைத்துக்கொள்ளலாம்.
மும்பை இந்தியன்ஸ் என்ன செய்யப்போகிறது?
அணிகள் வீரர்களை தக்கவைக்கும் விலை ஸ்லாட்களும் இந்த முறை வழக்கத்தை போல் இல்லை என்பதால் ஒவ்வொரு அணியும் யார் யாரை ஏலத்திற்கு முன்னரே எடுக்கும், யார் யாரை RTM மூலம் எடுக்கும் என பெரும் விவாதங்கள் தற்போது தொடங்கிவிட்டன. அக். 31ஆம் தேதிக்குள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
இவை ஒருபுறம் இருக்க, நட்சத்திர ரோஹித் சர்மா (Rohit Sharma) இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி அனைத்து ரசிகர்களின் மனதில் உள்ளது. ஏனென்றால் கடந்த சீசனில், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து டிரேட் செய்து அணிக்குள் கொண்டு வந்த மும்பை அணி, ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக்கை கேப்டனாக்கியது. இது பரபரப்பாக பேசப்பட்டது என்றாலும் அணியிலும் ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.
மும்பை அணி கடந்த சில சீசன்களாகவே சிறப்பாக செயல்படாவிட்டாலும் 2024 சீசனில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தலைமையில் கடைசி இடத்தையே பிடித்தது. அதற்கு முன் 2023ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா தலைமையில் பிளே ஆப் வரை வந்தது. குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத்திடம் தோல்வியடைந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருந்தது. கடைசியாக மும்பை 2020ஆம் ஆண்டில்தான் கோப்பையை வென்றது. 2021ஆம் ஆண்டில் பிளே ஆப் சுற்றுக்கே வராத மும்பை, 2022இல் மிகவும் மோசமாக 10ஆவது இடத்தைதான் பிடித்தது.
மாறிய காட்சிகள்
எனவே, இந்த 2025 சீசனில் மும்பை அணியில் (Mumbai Indians) மீண்டும் ஒரு கேப்டன்ஸி மாற்றம் இருக்குமா அல்லது ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி, ரோஹித் மும்பை அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியுடன் சேர்ந்தே எழுந்துள்ளது. 2024 ஐபிஎல் சீசனுக்கு பின், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுவிட்டது, ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியாவுக்கு இடையில் எவ்வித பிணக்கும் இல்லையென்பதும் உறுதியாகிவிட்டது, தற்போது இந்திய அணியின் டி20 கேப்டன்ஸியும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கைகளுக்கு மாறியுள்ளதால் மும்பை அணி கேப்டன்ஸி விஷயத்திலும், வீரர்களை தக்கவைக்கும் விஷயத்திலும் என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு வந்தால்... கப்புனு தூக்கக் காத்திருக்கும் இந்த 3 அணிகள்!
மும்பையில் மீண்டும் ஜெயவர்தனே
இந்த சூழலில், தற்போது மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளார். 2023, 2024 சீசனில் பயிற்சியாளராக இருந்த மார்க் பௌச்சர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவே (Mahela Jayawardene) மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். ஜெயவர்தனே 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை மும்பையின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர். இவரின்கீழ் ரோஹித் தலைமையிலான மும்பை அணி 2017, 2019, 2020 என மூன்று சீசன்களில் கோப்பையை வென்றது. அப்படியிருக்க தற்போது ஜெயவர்தனே மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளது இன்னும் பல திறப்புகளை உண்டாக்கி உள்ளது.
கேப்டன்ஸி மாற்றம் இருக்குமா?
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்ஸி மாற்றத்திற்கும் தயாராகிவிட்டது என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து ஆல்-ரவுண்டராக தொடர்வார் என்றும் ரோஹித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. வரும் அக். 31ஆம் தேதி மும்பை அணி எந்தெந்த தொகைக்கு யார் யாரை தக்கவைக்கிறது என்பதில் இருந்தே அந்த அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | கேப்டனான சிறிது நாட்களிலேயே சூர்யகுமார் யாதவ் செய்த சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ