அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்... பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி - வெளியேறிய ஆஸி.,
AFG vs BAN Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
AFG vs BAN Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே பல அதிர்ச்சிகள் வழக்கமாகிவிட்ட நிலையில், சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி வரையிலும் அதே அதிர்ச்சி தொடர்ந்துள்ளது எனலாம். குரூப் சுற்றோடு இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட பெரிய அணிகள் வெளியேறிய சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் தகுதிபெற்றன.
நேற்றிரவு நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததை அடுத்து அரையிறுதிக்கான வாய்ப்பு ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களையே 20 ஓவர்களில் எடுத்தது. இதனால், வங்கதேச அணி அரையிறுதிக்குச் செல்லவும் சிறிய வாய்ப்பு உண்டாயிற்று.
பரபரப்பான போட்டி
அதாவது, 116 ரன்கள் இலக்கை அந்த அணி 12.1 ஓவர்களில் எடுத்துவிட்டால் அரையிறுதிக்கு தகுதிபெறலாம் என்று... மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியோ போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல இயலும் அல்லது போட்டி மழையால் தடையாக வேண்டும். வங்கதேச அணி 12.1 ஓவர்களுக்கு மேல் சென்று வெற்றி பெற்றாலும், ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தாலும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு வந்துவிடும். எனவே, இந்த 116 ரன்களை வங்கதேச அணி எப்படி அடிக்கப்போகிறது என மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | 'விராட், ரோஹித் நீக்கம்...?' கம்பீர் போட்ட கண்டிஷன் - என்ன விஷயம்?
ஆப்கானிஸ்தான் அணியோ தன்னால் முடிந்த முயற்சிகளை களத்தில் எடுத்துக்கொண்டிருந்தது. பவர்பிளே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் மிரட்ட, வங்கதேச அணிக்கோ லிட்டன் தாஸ் தூணாக நின்று ரன்களை எடுத்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் 12.1 ஓவர்களில் இலக்கை நெருங்கும் திட்டத்துடன் வங்கதேசம் அணி இறங்கியது.
ஆனால், சௌமியா சர்கார், ஹிர்தோய், மொஹமதுல்லா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷத் ஹோசனையும் டக்அவுட்டாக ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. எனினும், லிட்டன் தாஸ் மட்டும் தனியாளாக போராடினார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இலக்கும் 116இல் இருந்து 114 ஆக குறைக்கப்பட்டது.
வரலாற்று வெற்றி
கடைசி கட்டத்தில் 12 பந்துகளில் 12 ரன்கள். கடைசிக்கு முந்தைய ஓவரை நவீன் உல்-ஹக் வீசினார். மூன்று பந்துகள் லிட்டன் தாஸ் - டஸ்கின் அகமது ஆகியோர் சிங்கிள் எடுத்துக்கொண்டிருக்க, நான்காவது பந்தில் தஸ்கின் போல்டானார். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. 8 பந்துகளில் 9 ரன்கள் வங்கதேச அணி வெற்றிக்கு தேவை, மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விக்கெட் மட்டுமே வேண்டும். ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், வீரர்கள், அணி நிர்வாகத்தினர் ஏன் கிரிக்கெட் உலகமே அந்த ஒரு விக்கெட்டுக்கு காத்துக்கொண்டிருக்க முஸ்தபிசுர் ரஹ்மானை நவீன் உல்-ஹக் அவரின் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தி வெற்றிக் கனியை பறித்துக்கொடுத்தார்.
வெளியேறிய ஆஸ்திரேலியா
நவீன் உல்-ஹக்கின் புத்திசாலித்தனமான அந்த பந்தால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, முதல்முறையாக ஐசிசி தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குள் தகுதிபெற்ற பெருமையை பெற்றது. கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தற்போது அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்த முறை நாக்-அவுட் பக்கம் வராமலேயே வெளியேறியிருக்கிறது.
தொடரை நடத்திய மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையாக போராடி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 27ஆம் தேதி காலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா அணியை, ஆப்கானிஸ்தான் சந்திக்கிறது. மேலும் ஜூன் 27ஆம் இரவு 8 மணிக்கு இந்தியா - இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ