IND vs ENG: இந்திய அணி வெற்றிக்கு... விராட் கோலியின் முதல் ரியாக்சன் என்ன?
India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
India National Cricket Team: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் (IND vs ENG Test Series) மேற்கொண்டுள்ளது. பாஸ்பால் (Bazball) அணுகுமுறையை கைக்கொண்ட பின்னர், மெக்கலம் - பென் ஸ்டோக்ஸ் வழியிலான இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் தோற்றதே இல்லை என்ற கெத்துடன் இந்தியாவுக்கு வந்தது.
அதே போன்றே இங்கிலாந்து அணி, ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி தனது சொந்த மண்ணில் பாஸ்பால் அணுகுமுறையை கை ஓங்க விடவே இல்லை எனலாம். விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 2ஆவது, 3ஆவது போட்டியை அசத்தலாக வென்று தொடரில் தனது ஆதிக்கத்தை இந்தியா நிலைநாட்டியது.
17ஆவது தொடர் வெற்றி
தொடர்ந்து, கடந்த 23ஆம் தேதி ராஞ்சியில் (Ranchi Test) தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டி நான்காவது நாளான இன்று நிறைவு பெற்றது. குறிப்பாக, இந்த நான்கு போட்டிகளும் ஐந்தாவது நாளுக்கே செல்லவில்லை, நான்காவது நாளிலேயே அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ளது. நான்காவது போட்டியை வென்றதன் மூலம் தொடரையும் இந்திய அணி வென்றிருக்கிறது.
மேலும் படிக்க | ராஞ்சி டெஸ்ட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது
2014ஆம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காத அணியாக இந்தியா உள்ளது. தொடர்ச்சியாக 17ஆவது தொடராக இதனையும் கைப்பற்றி இந்திய அணி, பாஸ்பால் அணுகுமுறைக்கு பின் இங்கிலாந்து அணியை முதல் முறையாக தோல்வியடைய செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இளம் அணி
குறிப்பாக, இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய அணி தடுமாறி வந்த வேளையில், தூணாக நின்று ரன்களை சேர்த்த துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) ஆட்ட நாயகனாக தேர்வானார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 90 மற்றும் 39 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்களும் இந்த போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்தது வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
விராட் கோலி, ரஹானே, புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் இல்லாத இந்த தொடரை, ரோஹித் சர்மா தலைமையிலான இளம் அணி வென்றிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்ட ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பளித்த இந்திய தேர்வுக்குழுவின் அணுகுமுறை தற்போது அவர்களுக்கு கைக்கொடுத்துள்ளது.
விராட் கோலி பாராட்டு
இந்நிலையில், இந்த இளம் அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் தனது பாராட்டை தெரிவித்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில்,"யெஸ், நம் இளம் அணிக்கு அற்புதமான வெற்றி. துணிவு, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றைக் காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் கேப்டன்ஸியில் இந்திய அணியின் டெஸ்ட் அணுகுமுறையே மொத்தமாக மாற்றியது எனலாம். அந்த வகையில், தற்போது டெஸ்ட் அணிக்கு புது ரத்தம் பாய்ந்திருப்பது அவருக்கு கோடாணக்கோடி மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதை இந்த பதிவு காட்டுகிறது.
விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்பின், தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டியில் முதல்கட்டமாக விலகிய நிலையில், இறுதியில் மொத்தமாக தொடரில் இருந்தே விலகினார். ஆனால், தனிப்பட்ட காரணம் என கூறப்பட்டாலும் குறிப்பிட்டு இதுதான் காரணம் என சொல்லவே இல்லை. தற்போது, அவருக்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Akaay என அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச சேசிங் செய்யப்பட்ட ரன்கள் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ