`எனக்கு பசி இன்னும் அடங்கல...` - முதல் கிராண்ட்ஸ்லாமை முத்தமிட்ட பிறகு கார்லோஸ் கர்ஜனை
`இந்த தருணத்தை நான் கொண்டாடி வருகிறேன். எனது கையில் கோப்பை இருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், இன்னும் எனக்கு பசி அடங்கவில்லை என்றுதான் கூறவேண்டும்` என அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று 19 வயதான கார்லோஸ் அல்கார்ஸ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்: நடப்பு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்றோடு நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மேலும், ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்த சீசனின் 2 கிராண்ட்ஸ்லாமை வென்றிருந்த நடாலும், அமெரிக்க ஓபன் தொடரின் நடப்பு சாம்பியனான மெட்வெடேவ்-ம், இத்தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியிருந்தனர். ஜாம்பவான் ஜோகோவிச் கரோனா தடுப்பூசி காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவும் இல்லை.
தொடர்ந்து, 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கார்ஸ் மற்றும் நார்வே நாட்டு வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இருவருக்கும் இதுவே முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி என்பதால்,டென்னிஸ் உலகிற்கு இம்முறை ஒரு புதிய சாம்பியன் கிடைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று (இந்திய நேரப்படி) நடைபெற்றது. இந்த போட்டியின், முதல் இரண்டு செட்களில் இருவரும் தலா ஒன்றை வென்றனர். ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். முதல் செட்டை 6-4 என்ற கார்லோஸ் வென்ற நிலையில், 2ஆவது செட்டை காஸ்பர் ரூட் 6-2 என்ற கணக்கில் வென்றார்.
இதன்பின், தனது வழக்கமான அதிரடியை ஆரம்பித்த கார்லோஸ் மூன்றாவது செட்டை 7-6 (7-1) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.
2005ஆம் ஆண்டு பிரஞ்சு கோப்பையில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், தனது 19ஆவது வயதில்தான் ஃபெடரரை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றிருந்தார். அதன்பின், தற்போது அதே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 19 வயதான கார்லோஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம், நடாலுக்கு பிறகு இளம் வயதில் முதல் கிராண்ட்ஸ்லாமை பெறும் வீரர் என்ற சாதனையை கார்லோஸ் பதிவுசெய்தார்.
அமெரிக்க ஓபனை வென்றதன்மூலம், டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு கார்லோஸ் முன்னேறியுள்ளார். இதன்மூலம், ஆடவர் டென்னிஸ் வரலாற்றில், மிக இளம் வயதில் நம்பர் 1 இடத்திற்கு வந்தவர் என்ற சாதனையையும் கார்லோஸ் படைத்துள்ளார்.
இந்த பெரிய வெற்றிக்கு பிறகு பேசிய கார்லோஸ்,"இந்த தருணத்தை நான் கொண்டாடி வருகிறேன். எனது கையில் கோப்பை இருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், இன்னும் எனக்கு பசி அடங்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்த நம்பர் 1 இடத்தில் நான் பல வாரங்கள் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அதில் நீடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். மீண்டும் நான் கடினமாக உழைக்க வேண்டும். இதுபோன்று பலவற்றை வெல்ல வேண்டும் என்றால், நான் கடினமாக சண்டைப்போட்டாக வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | இலங்கை வெற்றிக்கு தோனி தான் காரணமா? - உண்மையை கூறிய கேப்டன் தசுன் ஷனகா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ