IPL 2019: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டு சான்ட்னெர் இடம் பெற்றார்.
இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடு (1 ரன்), ஷேன் வாட்சன் (13 ரன்) இருவரும் 4-வது ஓவருக்குள் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினர். கேதர் ஜாதவும் (8 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் டோனியும் இணைந்தனர். 88 ரன்களை எட்டிய போது ரெய்னா (36 ரன், 32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) உனட்கட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் சென்னை பேட்ஸ்மேன்கள் 87 ரன்களை சேகரித்தனர். டோனி 75 ரன்களுடனும் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 176 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரஹானே (0), அடுத்து வந்த சஞ்சு சாம்சன் (8 ரன்) இருவரும் கேட்ச் ஆனார்கள். தொடர்ந்து ஜோஸ் பட்லர் 6 ரன்னில் விரட்டப்பட்டார். திரிபாதி (39 ரன்), ஸ்டீவன் சுமித் (28 ரன்) சரிவை சற்று நிமிர்த்தினர். 18-வது ஓவரில் 19 ரன்களும், 19-வது ஓவரில் 13 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுத்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.