ஐபிஎல் 2022 - வாய்ப்பை தக்கவைத்தது டெல்லி... வெளியேறியது பஞ்சாப்
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி டெல்லி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கின.
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணிக்கு டேவிட் வார்னரும், சர்ஃபராஸ் கானும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்ட வார்னர் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மிட்செல் மார்ஷும், சர்ஃபராஸ் கானும் ஜோடி சேர்ந்தனர். ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் அடித்து ரசிகர்களை மார்ஷ் உற்சாகப்படுத்தினார். இந்த ஜோடி 50 ரன்களை சேர்த்த சூழலில் சர்ஃபராஸ் கான் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய லலித் யாதவுடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். இருவரும் பஞ்சாப்பின் பந்துவீச்சை நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் எதிர்கொண்டனர். இதனால் இந்த ஜோடியும் 50 ரன்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அர்ஷ்தீப் வீசிய ஸ்லோயர் பந்தில் லலித் யாதவ் 24 ரன்களுக்கு வெளியேறினார்.
மேலும் படிக்க | வந்துவிட்டது பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள்! அணி விவரம்!
அவரைத் தொடர்ந்து பண்ட் களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸ் அடித்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த பவலும் 2 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய மார்ஷ் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய மார்ஷ் 63 ரன்களில் அவுட்டானார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தவானும், பேர்ஸ்டோவும் தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி டெல்லியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். ஒருபுறம் தவான் அமைதி காக்க மறுபுறம் பேர்ஸ்டோ அதிரடி காட்டினார்.
தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற பேர்ஸ்டோ நோர்க்யா ஓவரில் 28 ரன்களுக்கு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தவானுடன் ஜோடி சேர்ந்தார் ராஜபக்ஷே. ஆனால் அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 53-2 என்ற நிலையில் இருந்தது.
மேலும் படிக்க | ராயுடுவின் ட்வீட்டுக்கு காரணம் என்ன?... ப்ளெமிங் விளக்கம்
ராஜபக்ஷே ஆட்டமிழந்ததும் தவானும் 19 ரன்களில் வெளியேற பஞ்சாப் அணி 54-3 என தத்தளித்தது. அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பில் லிவிங்ஸ்டோனும், மயாங்க் அகர்வாலும் ஜோடி சேர்ந்தனர்.
ஆனால் அக்சர் படேல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் மயாங்க் ஆட்டமிழக்க பஞ்சாப் நிலைமை மோசமானது. அக்சர் படேல் இதன் மூலம் ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து லிவிங்ஸோனும் குல்தீப் யாதவுக்கு இரையாக பஞ்சாப் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு ரிஷி தவானும், ஜிதேஷும் சிறிது நேரம் தாக்குப்பிடிக்க இந்த ஜோடியை அக்சர் படேல் பிரித்தார். அணியின் ஸ்கோர் 82ஆக இருந்தபோது தவான் அக்சர் பட்டேல் ஓவரில் வெளியேறினார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜிதேஷும், ராகுல் சாஹரும் அதிரடி காட்ட வெற்றியை நோக்கி நெருங்கி வந்தது பஞ்சாப். ஆனால், ஜிதேஷ் 44 ரன்களில் வெளியேற அந்த அணியின் தோல்வி உறுதியானது. அதன் பிறகு வந்தவர்களும் சோபிக்க தவற இறுதியாக அந்த அணி 142 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணி ஐபிஎல் 2022லிருந்து வெளியேறியது. இதனால் பஞ்சாப் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR