சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்று முதல் உலக கோப்பையினை தட்டி சென்றது இங்கிலாந்து அணி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்டில் 19(18) ரன்களில் வெளியேற, மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 55(77) ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து வந்த கேன் வில்லியம்ஸன் 30(53), டாம் லாத்தம் 47(56) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் நியூசிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.



நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்துள்ளது.  இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், லெய்ம் புலுங்கெட் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.



இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து தரப்பில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84*(98) ரன்கள் குவித்தார். இவருகு துணையாக ஜோஸ் பட்லர் 59(60) குவித்தார். இருவரின் அதிரடி அணியின் வெற்றியின் விளிம்பிற்கு சென்று இறுதியாக ட்ராவில் முடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் குவிக்க, போட்டி வெற்றியாளரை முடிவுசெய்ய சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.


சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அளிக்கப்பட்ட ஒரு ஓவரில் 15 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 16 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. எனினும் இறுதி பந்தில் ரன் அவுட் என 15 ரன்கள் குவித்து சூப்பர் ஓவரிலும் ட்ரா செய்தது.


இதனையடுத்து ஆட்டத்தில் அதிக பவுன்டரி அடித்த அணி வெற்றி பெறும் என்ற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.