`போட்டியினு வந்துட்டா...` இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?
Gautam Gambhir: இந்திய அணி வீரர்களுக்காக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
Gautam Gambhir Team India: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர் கடந்த சில நாள்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார். அதற்கு முன் 2017-2021 வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளரகா இருந்தார்.
ரவி சாஸ்திரி - விராட் கோலி காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணி புதிய உச்சத்தை தொட்டது எனலாம். சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்தார்கள் எனலாம். 2021இல் விராட் கோலி தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை செல்லவும் ரவி சாஸ்திரி - விராட் கோலி ஆகியோரின் விதைதான் காரணம் எனலாம். 2014இல் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஸியை பெற்றதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் போக்கே மாறிவிட்டது எனலாம்.
உயர்ந்த இடத்தில் இந்திய அணி...
அடுத்து விராட் கோலி தலைமையில் 2021 டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்றோடு வெளியேறி இந்திய அணி துவண்டு கிடந்தது. ரவி சாஸ்திரிதான் அப்போது பயிற்சியாளர். அத்துடன் அவரின் பதவிக்காலம் நிறைவடைய இந்திய அணியின் ஒட்டுமொத்த கேப்டன்ஸியும் ரோஹித் சர்மாவின் கைகளுக்குள் சென்றது. 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை வந்து தோற்ற இந்திய அணி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்ற இந்திய அணி கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது.
இந்திய அணியின் 11 ஆண்டுகால ஐசிசி கோப்பை தாகத்தை தீர்த்தது மட்டுமில்லாமல் இந்திய அணியை வைட் பால் கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான இடத்திற்கும் ரோஹித் - ராகுல் ஜோடி எடுத்துச் சென்றுள்ளது. டெஸ்ட் மற்றும் வைட் பால் போட்டிகளில் இந்திய அணி தற்போது சிறப்பாக இடத்தில் இருப்பதால் அடுத்து ரோஹித் - கம்பீர் ஜோடிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆம், அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் இந்திய அணி கைப்பற்ற துடிப்பாக உள்ளது.
இது கௌதம் கம்பீரின் காலம்
அந்த வகையில் கௌதம் கம்பீர் அதை எப்படி செய்யப்போகிறார், அணியில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவரப்போகிறார், வீரர்கள் உடனான உறவு எப்படி இருக்கப்போகிறது ஆகிய விஷயங்கள் ரசிகர்களின் மனங்களில் அதிகம் இருக்கிறது. இந்நிலையில், கௌதம் கம்பீர் இந்திய அணி வீரர்களுக்காக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றில் அவர் பேசுகையில்,"விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் காயங்களும் ஒரு பகுதியாகும். நீங்கள் மூன்று ஃபார்மட்டுகளிலும் விளையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் காயம் அடையும்பட்சத்தில் திரும்பிச் சென்று குணமடையும் செயல்பாட்டில் இருப்பீர்கள். ஆனால், திரும்பிவரும் போது நீங்கள் மூன்று ஃபார்மட்களிலும் விளையாட வேண்டும்.
அனைத்து பார்மட்களிலும் விளையாடுங்கள்
தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கு குறைந்த காலம்தான் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களால் முடிந்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும்போது, மூன்று ஃபார்மட்களையும் விளையாடுங்கள்.
நேர்மையுடன் விளையாட ஒரே ஒரு மந்திரம்தான், உங்களின் தொழிலிலும் செயலிலும் முடிந்தவரை நேர்மையாக இருக்கவும், அப்படி இருந்தாலே நீங்கள் நினைக்கும் முடிவுகளை எட்டலாம். நான் விளையாட தொடங்கியபோது முடிவுகள் குறித்து நான் யோசிக்கவே இல்லை. இத்தனை போட்டிகளை விளையாட வேண்டும், இத்தனை ரன்களை அடிக்க வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. எனது தொழிலுக்கு என்னால் முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இதுதான் தேவை...
உலகமே உங்களுக்கு எதிராக இருக்கிறது என நீங்கள் நினைத்தாலும், சில கொள்கைகளின் அடிப்படையில் வாழுங்கள், சரியானதைச் செய்யுங்கள், அதற்கு முயற்சியுங்கள். அதுவும் அணியின் நலனுக்காக நீங்கள் சரியானதைதான் செய்கிறீர்கள் என உங்கள் மனது சொல்ல வேண்டும்...
கிரிக்கெட் களத்தில் நான் ஆக்ரோஷமாக இருந்திருந்தாலும், சிலருடன் மோதல்களை சந்தித்திருந்தாலும், அவை அனைத்தும் அணியின் நலனுக்காக மட்டுமே. ஏனென்றால் இறுதியில் அணிதான் முக்கியம், தனிநபர் அல்ல. நீங்கள் எந்த அணிக்காக விளையாடினாலும் உங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே யோசியுங்கள். ஏனெனில் அதுதான் குழு விளையாட்டு போட்டிகளில் தேவை. இது உங்கள் சுயத்தைப் பற்றி சிந்திக்கும் ஒரு தனிப்பட்ட விளையாட்டு அல்ல என்பதையும் மனதில் கொள்ளுங்கள்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ