IPL 2023: கோலி கேப்டன்சியில் தொடரும் வெற்றி... மீண்டும் சேஸிங்கில் கோட்டைவிட்ட ராஜஸ்தான்!
IPL 2023 RCB vs RR: ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
IPL 2023 RCB vs RR: நடப்பு தொடரின் 32ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியிலும், விராட் கோலி ஆர்சிபியின் கேப்டனாக செயல்பாட்டார்.
அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு முதல் பந்தே மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்தது. போல்ட் வீசிய அந்த பந்தில், விராட் கோலி அவுட்டானார். அது ஐபிஎல் தொடரில் போல்ட்டின் 100ஆவது விக்கெட்டாகவும் அமைந்தது. தொடர்ந்து, ஷாபாஸ் அகமதும் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், அதன் பிறகு ஓப்பனர் டூ பிளேசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியைக் கைக்கொண்டனர்.
இந்த ஜோடி சுமார் 11 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடி, 127 ரன்களை சேர்த்தனர். டூ பிளேசிஸ் 62 ரன்களுடனும், சிறிது நேரத்திலேயே மேக்ஸ்வெல் 77 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். மேக்ஸ்வெல் 15 ஓவரில் ஆட்டமிழந்தபோது, ஸ்கோர் 156 ஆக இருந்தது. ஆனால், அவர்களுக்கு பின் களமிறங்கிய யாரும் அதிரடி காட்டாததால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது. அதாவது கடைசி 5 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே எடுத்து, 5 விக்கெட்டுகளையும் இழந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் போல்ட், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், ஜெய்ஸ்வால் 47, படிக்கல் 52 ரன்கள் எடுத்து சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். சஞ்சு சாம்சன் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, அவரும் 22 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாற தொடங்கியது.
அடுத்து வந்த ஜூரேல் அதிரடி காட்டினார். மறுப்புறம் ஹெட்மயர் 3 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். இதனால், கடைசி ஓவருக்கு 20 ரன்கள் ராஜஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. 4, 2, 4 என முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுக்கப்பட்டாலும், 4ஆவது பந்தில் அஸ்வினை அவுட்டாக்கி ஹர்ஷல் படேல் விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்த இரண்டு பந்துகளிலும் அந்த அணியால் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 7 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை வீழ்த்தியது. ஜூரேல் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பெங்களூரு அணி, 7 போட்டிகளில் விளையாடி (4 வெற்றி, 3 தோல்வி) 8 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி (4 வெற்றி, 3 தோல்வி) 8 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளன.
மேலும் படிக்க | சென்னை vs கொல்கத்தா: பலம் மற்றும் பலவீனம்! இன்றைய போட்டி கேகேஆர் அணிக்கு சாதகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ