WTC Final: அசுர ஆட்டம் ஆடிய ஆஸ்திரேலியா... அஸ்வின் இல்லாததால் இந்தியாவுக்கு ஆப்பு?
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சு மிக மோசமான நிலைமையில் உள்ளது.
World Test Championship Final 2023 Updates: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ரோஹித் சர்மா, வானிலை காரணமாகவும், ஆடுகளம் புல் நிறைந்து காணப்படுவதாலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து நான்கு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற பார்முலாவுடன் களமிறங்கினார்.
முதல் செஷன் ஆதிக்கம்
பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறவில்லை. சிராஜ், ஷமியுடன் உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் 3ஆவது, 4ஆவது வேகப்பந்துவீச்சாளர்களாக களம்கண்டனர். ஒரே இடதுகை வீரராகவும், ஒரே சுழற்பந்துவீச்சாளராகவும் ஜடேஜா அணியில் உள்ளார். இந்த சூழலில், முதல் செஷனில் சற்றே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 23 ஓவர்களை வீசி 73 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தது. தொடர்ந்து, மதிய உணவு இடைவேளைக்கு பிறகான இரண்டாவது ஓவரிலேயே லபுஷேன் ஷமி பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்திருந்தார்.
லபுஷேன் கிளீன் போல்ட்...
அடுத்த விளையாடிய டிராவிஸ் ஹெட் விரைவாகவும், ஸ்மித் நிதானமாகவும் விளையாடிய நேர்த்தியாக ஸ்கோரை உயர்த்தினர். ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ஆகியோரிடம் பெரிய பலன்கள் கிடைக்காமல் இரண்டாம் செஷனின் பிற்பாதியில் ஜடேஜா முதல்முறையாக போட்டியில் பந்துவீச வந்தார். ஆனால், அவருக்கு ஆடுகளத்தில் பெரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஹெட் 60 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். இதனால், தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 51 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்திருந்தது. இந்த செஷனில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது எனலாம்.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து உயிரிழப்பு! ரோஹித் சர்மா ரூ 15 கோடி நன்கொடை கொடுத்தாரா?
முழு ஆதிக்கம்
இதையடுத்து, மூன்றாவது செஷனில் ஆஸ்திரேலியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ஷமி - சிராஜ் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சொதப்ப அதை ஸ்மித் - ஹெட் ஜோடி பயன்படுத்திக்கொண்டது. ஸ்மித் அரைசதம் கடந்த நிலையில், ஹெட் 106 பந்துகளில் சதம் அடித்துத மிரட்டினார்.
ஹெட் மிரட்டல் சதம்
இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில், 80.3 ஓவரில் புதிய பந்தை இந்தியா எடுத்தது. கடைசி நேரத்தில் ஏதாவது விக்கெட்டுகள் கிடைக்கும் என இந்தியா எதிர்பார்த்தது. ஆனால், அதிலும் இந்த மிரட்டல் ஜோடி மண்ணள்ளி போட்டது எனலாம். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் (85 ஓவர்கள்) 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். மேலும், இந்த ஜோடி 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
ஒழுங்கை கடைபிடிக்காத இந்திய பவுலர்கள்
இந்திய பந்துவீச்சு சார்பில் ஷமி, சிராஜ், ஷர்துல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். குறிப்பாக, வீசப்பட்ட 85 ஓவர்களில் ஷிமி 20, சிராஜ் 19 என 39 ஓவர்கள் இந்த இணை வீசியது. சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜா 14 ஓவர்களை வீசி விக்கெட்டுகள் ஏதுமின்றி 48 ரன்களை கொடுத்தார். உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் முறையே 14, 18 ஓவர்கள் வீசினர். இருப்பினும், இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கவில்லை. குறிப்பாக, லைன், லெந்த்தை அடிக்கடி மாற்றியது, சரியான திட்டத்தை சரியான நேரத்தில் மேற்கொள்ளாதது, ரன்களை கசியவிட்டது என பலவற்றை கூறலாம். நாளை முதல் செஷனுக்குள் ஆட்டத்தை கைக்குள் கொண்டுவராவிட்டால், இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த நேரிடும்.
அஸ்வினை அமரவைத்தது சரியா?
தொடக்கத்தில் சற்று ஆக்ரோஷம் காட்டிய இந்தியா, அடுத்து பொட்டிப்பாம்பாக ஆஸ்திரேலிய பேட்டர்களிடம் அடங்கியது போன்று இருந்தது. இந்த சூழலில் அஸ்வினை எடுக்காதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என சமூக வலைதளங்களிலும் பலர் தெரிவிக்கின்றனர். எந்த சூழலிலும், எந்த ஆடுகளத்திலும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நம்பர் 1 டெஸ்ட் பௌலரை பெவிலியனில் அமரவைத்தது சரியான முயற்சியல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போக போகத் தெரியும்
டிராவிஸ் ஹெட், கவாஜா, வார்னர், அலெக்ஸ் கேரி என இத்தனை இடதுகை பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது அஸ்வின் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். பேட்டிங்கிலும் உமேஷ் யாதவை விட அஸ்வின் நல்ல பங்களிப்பை அளிப்பார் எனவும், ரோஹித் - ராகுல் ஜோடி இதில் சற்று ரிஸ்க் எடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் ஐடியா கொடுத்து வருகின்றனர். ஆனால், ஆடுகளத்தில் புல் அதிகமாக காணப்படும் வேளையிலும், சுழலுக்கு சுத்தமாக ஒத்துழைக்காத ஆடுகளத்திலும் எப்படி அஸ்வினை களமிறக்க முடியும் எனவும் எதிர்வாதம் வைக்கின்றனர், வல்லுநர்கள்.
அஸ்வின் இல்லாதது இந்திய அணியை பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறதா என்பதை இன்றைய ஆட்டத்தை வைத்து மட்டும் சொல்லிவிட இயலாது. இந்த போட்டி செல்ல அஸ்வின் மீதான முடிவுக்கு தகுந்த பதில் கிடைக்கும் என தெரிகிறது.
முதல் நாள் நிலவரம் - ஆஸி., பேட்டிங்
முதல் செஷன்: 23 ஓவர்கள் - 73 ரன்கள் - 2 விக்கெட்டுகள்
இரண்டாம் செஷன்: 28 ஓவர்கள் - 97 ரன்கள் - 1 விக்கெட்
மூன்றாம் செஷன்: 34 ஓவர்கள் - 157 ரன்கள் - விக்கெட் இல்லை
மேலும் படிக்க | IND vs AUS: WTC 2023 இறுதி போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ