இறுதிப்போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு தலைவலி கன்பார்ம்... இதுதான் காரணம்!
IND vs AUS Final 2023: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வீர்ர மேக்ஸ்வெல்லுக்கு சிக்கலுக்குரிய நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
IND vs AUS Final 2023: ஒருநாள் போட்டிக்கான 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) இந்தியாவில் கடந்த அக. 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், தற்போது, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் (IND vs AUS) சாதரணமாக மோதினாலே போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தற்போது உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் மோத இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது. 2003ஆம் ஆண்டில் அடைந்த தோல்விக்கு இந்தியா (Team India) பழிதீர்க்க காத்திருந்தாலும், ஆஸ்திரேலியா அதன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டவும் காத்திருக்கிறது.
அந்த வகையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 8 மாநில முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்கின்றனர். எனவே பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் சில கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன் மதியம் 1.35 மணி முதல் 1.50 மணிவரை இந்திய விமானப்படையின் சூர்யகிரண் குழுவினர் கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும். முதல் இன்னிங்ஸ் குடிநீர் இடைவேளையின் போது பாடகர் ஆதித்யா கட்வியின் நிகழ்வு நடைபெறுகிறது.
முதல் இன்னிங்ஸ் முடிந்த பின் பிரிதம் சக்ரபூத்தி, ஜோனிட்டா காந்தி, நாகாஷ் அஸிஸ், அமித் மிஷ்ரா, ஆகாஷா சிங், தூஷார் ஜோஷி ஆகியோரின் நிகழ்வு நடைபெறும். இரண்டாம் இன்னிங்ஸ் குடிநீர் இடைவேளையில் லேசர் மற்றும் லைட் ஷோக்கள் நடைபெற உள்ளன. இதில், லேசர் மற்றும் லைட் ஷோக்களுக்கு மேக்ஸ்வெல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், இறுதிப்போட்டியில் மீண்டும் லைட் ஷோக்கள் இடம்பிடித்திருப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
லேசர் ஷோ குறித்து மேக்ஸ்வெல் முன்னர் கூறுகையில்,"ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் பிக் பாஷ் தொடரில் நடந்ததைப் போன்று இந்த உலகக் கோப்பையிலும் Light Show நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அது எனக்கு அதிர்ச்சியூட்டும் தலைவலியைக் கொடுத்தது போல் உணர்ந்தேன். மேலும் என் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் ஆனது.
கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இது ஒரு முட்டாள்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன். இது கண்களுக்கு அடிக்கும்போது, உங்கள் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் எடுக்கும், நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்தோம் என்று நினைக்கிறேன், பெர்த் ஸ்டேடியம் Light Show முட்டாள்தனமானது. நான் பேட்டிங்கிற்கு மறுமுனையில் இருந்தேன், கண்கள் மீண்டும் இயல்பாக மாறுவதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. எனக்கு தலைவலி இருப்பது போல் உணர்ந்தேன் - அதனால் நான் முடிந்தவரை கண்களை மூடி மறைக்க முயற்சிக்கிறேன், அதை புறக்கணிக்கிறேன். ஆனால் இது ஒரு பயங்கரமான, மோசமான யோசனை. ரசிகர்களுக்கு கொண்டாடத்தக்கது என்றாலும், வீரர்களுக்கு ஏற்புடையது இல்லை" என்றார். ஆனால், அவரின் சக நாட்டு வீரரான டேவிட் வார்னர் லைட் ஷோக்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ