மாயாஜாலம் காட்டிய மேக்ஸ்வெல்... வான்கடேவில் ஆஸி., வரலாற்று வெற்றி - அடங்கியது ஆப்கானிஸ்தான்!
AUS vs AFG: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 200 ரன்கள் அடித்து மிரட்டினார்.
ICC World Cup 2023, AUS vs AFG: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் லீக் சுற்று இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. இந்த வாரத்தின் ஒவ்வொரு லீக் போட்டியும் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில், இன்றைய ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இன்றைய போட்டி அமைந்துள்ளது.
துவண்டு போயிருந்த ஆஸ்திரேலிய அணியை தனி ஆளாக நின்று கரை சேர்த்து, 200 ரன்களை அடித்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல். ஆப்கானிஸ்தான் அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், தொடக்க விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. குறிப்பாக ஒரு கட்டத்தில் 18.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. மேக்ஸ்வெல் ஒருவர்தான் ப்ரீமியம் பேட்டராக உள்ளே இருந்தார். கேப்டன் கம்மின்ஸ் அப்போது களம்புகுந்தார்.
ஒரு முனையில் கம்மின்ஸ் கைக்கொடுக்க பட்டாசை வெடித்தார் மேக்ஸ்வெல். யார் பந்துவீச வந்தாலும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியாக வந்துவிடும் அளவிற்கு மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். மேக்ஸ்வெல் கொடுத்த ஒரு எளிய கேட்சை முஜீப் உர் ரஹ்மான் தவறவிட்டார். அப்போது மேக்ஸ்வெல் வெறும் 33 ரன்களையே எடுத்திருந்தார். ஆனால், அதன்பின் மேக்ஸ்வெல் எந்த வாய்ப்பையும் யாருக்கும் வழங்கவே இல்லை. சிக்ஸரையும், பவுண்டரியையும் குவித்தார். ரன்ரேட்டை 8 ரன்களிலேயே அவர் வைத்துக்கொண்டார்.
மேலும் படிக்க | அரையிறுதியில் ஆப்கான்? - சச்சினுக்கு நன்றி சொன்ன இப்ராஹிம் சத்ரான்... ஏன் தெரியுமா?
ஆனால், மறுமுனையில் கம்மின்ஸ் டெஸ்ட் இன்னிங்ஸேய விளையாடினார். எந்த ஒரு பெரிய ஷாட்டுக்கும் போகாமல் மேக்ஸ்வெலுக்கு ஸ்ட்ரைக் கொடுப்பதை மட்டுமே அவர் தனது பணியாக கொண்டார். மேக்ஸ்வெலுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு, விளையாட கடுமையான சிரமத்திற்கு உள்ளானார். இருந்தாலும், கால்களை நகற்றாலும் தனது பவராலேயே அவர் ஷாட் அடித்து மிரட்டினார்.
100, 150, 175 என ஒவ்வொரு மைல்கல்லையும் மேக்ஸ்வெல் தகர்த்தார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் யாரையும் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பவுண்டரியாக அடிக்க 46.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது மட்டுமில்லாமல் 200 ரன்களை கடந்து மெய் மறக்க வைத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 201 ரன்களை அடித்தார். மறுமுனையில், கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு பவுண்டரியை அடித்து 12 ரன்களையே எடுத்திருந்தார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்ச சேஸிங் இதுதான். மேலும், ஒருநாள் அரங்கில் சேஸிங்கில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மேக்ஸ்வெல்லின் இந்த ஆட்டம் தனி சிறப்பை பெறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நேற்று சர்ச்சை... இன்று விலகல்... நாடு திரும்பும் கேப்டன் ஷகிப் - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ