சாம்பியன்ஸ் டிராபி 2017: ஆஸ்திரேலியா வீழ்த்தியது இங்கிலாந்து!
சாம்பியன்ஸ் டிராபி 2017 ஏ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபெற்றது.
இறுதியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது என அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோக் 102, மோர்கன் 87 ரன்கள் எடுத்தனர்.
இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியதால் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.