சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று நடக்க இருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக குப்தில், ரோஞ்சி களமிறங்கினர். 6-வது ஓவரின் போது 40 ரன்களை சேர்த்திருந்த நிலையில், 26 ரன்களை குவித்திருந்த குப்தில் ஹாசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஞ்ச் - கேப்டன் வில்லியம்சன் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. 117 ரன்களை எடுத்திருந்த நிலையில், 65 ரன்களை எடுத்திருந்த ரோஞ்ச் ஹேஸ்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சதம் விளாசிய வில்லியம்சன் ரன் அவுட் ஆனார். டெய்லர் 46 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹாசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே சேர்த்தனர். இறுதியில் 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களை எடுத்தது.
இதன் இடையே மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி போட்டி 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
235 ரன்களை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக பிஞ்ச், வார்னர் களமிறங்கினர். இதில் 18 ரன்களை சேர்த்த வார்னர் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிஞ்ச் 8 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 18 ரன்னில் வெளியேறிய போது மீண்டும் மழை குறுக்கிட்டது.
கேப்டன் ஸ்மித் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.