புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் எட்டாம் தேதியன்று நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை (ICC Women's T20 World Cup) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் (women's team) களம் கண்டன.  இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணி டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.  இந்தப் போட்டியை பார்த்தவர்களின் டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்புத் தகவல்களின் தரவுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி (ICC) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிதான், இதுவரை அதிக அளவில் பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டி என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

READ Also |  T20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை 


பிப்ரவரி 21 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டிகளை ஐ.சி.சியின் டிஜிட்டல் சேனல்கள் ஒளிபரப்பின.  அவற்றை 1.1 பில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.  இதற்கு முன்னதாக 2019 ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரைத் தான் அதிக அளவிலான மக்கள் டிஜிட்டல் சேனல்களில் கண்டு ரசித்துள்ளனர்.  அதற்கு பிறகு அதிகமான அளவிலான பார்வையாளர்களை ஈர்த்த போட்டியாக இந்த ஆண்டின் மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி சாதனையை பதிவு செய்துள்ளது.


இந்தப் பதிவானது, 2018ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற போட்டியை விட 20 மடங்கு அதிகம் என்பதும், 2017ஆம் ஆண்டின் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் பார்வையாளர்களை விட 10 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளிலும் அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டித் தொடராகவும் இந்த டி-20 உலகக் கோப்பைத் தொடர் அமைந்துள்ளது.  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 86,174 பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு களித்துள்ளனர்.


READ Also | இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்ளுவேன்: அசாருதீன்


இந்திய மகளிர் அணி முதன்முறையாக இந்த ஆண்டுதான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.  1.78 பில்லியன் நிமிடங்கள் வரை தொலைகாட்சிகள் மக்கள் இந்தப் போட்டியை பார்த்ததும் ஒரு சாதனைப் பதிவு.  இது 2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியைப் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட 59 மடங்கு அதிகம் என்பதும், ஒட்டுமொத்த போட்டித்தொடரின் பார்வையாளர்களில் 35 சதவிகித அதிகரிப்பு காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 


இந்திய மகளிர் அணியின் போட்டிகளை நேரலையில் கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 9.02 மில்லியன், இது 2018ஆம் ஆண்டின் எந்தவொரு போட்டியையும் பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  அதேபோல் இந்த போட்டித் தொடரின் மிகவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட போட்டி இது என்பதையும், பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டியானது 154 சதவிகிதம் பார்வையாளர்களை அதிகமாக கொண்ட போட்டி என்பதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  


READ Also | MS டோனியை புறக்கணிக்கிறதா BCCI... வருத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்...


இது குறித்து பேசும்  ஐ.சி.சி தலைமை நிர்வாகி மனு சாவ்னி, “இது மிகச்சிறந்த ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் சக்தியை காட்டுகிறது. உலகளாவிய பார்வையாளர்களை திரட்டுவதற்கும் ரசிகர்களின் ஈடுபாடுகளை அதிகரிப்பதற்கும் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்குமான சக்தி வாய்ந்த ஊடகமாக டிஜிட்டல் தளம் மாறியுள்ளது. கிரிக்கெட், உலகின் மகளிர் விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று என்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன. டிஜிட்டல் தளத்தின் தேவையை உணர்த்துவதாகவும் விளையாட்டிற்கான நீண்டகால நிலையான அடித்தளத்தை உருவாக்கவும் இந்த தரவுகள் அடிப்படையாக இருக்கின்றன” என்று கூறுகிறார்.