இரு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார். 


இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 202 ரன்களும் சஹா 117 ரன்களும், முரளி விஜய் 87 ரன்களும் எடுத்தனர். 


அடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், மேத்யூ ரென்ஷாவும் களம் இறங்கினர். வார்னருக்கு (14 ரன்)  எடுத்த நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி போல்டு ஆனார். அடுத்து வந்த நாதன் லயனும் (2 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.


கடைசி மற்றும் 5வது நாளான இன்று 2 விக்கெட்டுக்கு 23 ரன்களுடன் தனது ஆட்டத்தை தொடர்ந்தது ஆஸ்திரேலியா அணி.  ரென்ஷா 15 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த ஓவரில் கேப்டன் ஸ்டீவன் சுமித் 21 ரன்கள் இருந்த நிலையில் ஜடேஜாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். 


இதையடுத்து இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்மித்துக்கு அடுத்து வந்த மிச்செல் மார்ஸ் மற்றும் ஹாண்ட்கோம்ப் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய 2-வது செசனிலும், அதன்பின் நடைபெற்ற 3-வது செசனிலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.


இறுதியாக ஆஸ்திரேலியா 35 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தபோது மார்ஷ் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியா 100 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.


தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி 25-ம் தேதி தரம்சாலாவில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக்கைப்ப ற்றும்.