இந்தியா-வங்காளதேசம் 2-வது நாள் டெஸ்ட் போட்டி
வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.
ஐதராபாத்: வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ஐந்து பேட்ஸ்மேன், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, விராட் கோலி, ரகானே, சகா, அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லோகேஷ் ராகுல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 45 ரன்னுடனும், புஜாரா 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. 30.4 ஓவரில் இந்தியா 100 ரன்னைத் தொட்டது. முரளி விஜய் 82 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் சேர்த்தார். அடுத்து 108 பந்தில் புஜாரா அரைசதம் அடித்தார்.
இந்தியா 180 ரன்கள் சேர்த்திருக்கும்போது 2-வது விக்கெட்டை இழந்தது. புஜாரா 177 பந்தில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாடினார்.
இந்தியா 54.2 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. முரளி விஜய் 149 பந்தில் 11 பவுண்டரிகள், 1 சிக்சருடன் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 108 ரன்னி்ல் ஆட்டம் இழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா முதலில் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் விளையாடி கோலி 70 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 130 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியாவின் ஸ்கோர் 300-ஐத் தாண்டி வேகம் பிடித்தது.
மறுமுனையில் ரகானே அதிரடி காட்ட, இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. சராசரி 3.95 ரன்னாகும். கடைசி 10 ஓவரில் மட்டும் இந்தியா 71 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 141 பந்தில் 12 பவுண்டரியுடன் 111 ரன்னுடனும், ரகானே 60 பந்தில் 45 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வங்காள சேதம் அணி சார்பில் தஸ்கின் அகமது, மெஹேதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இன்றைய 2-வது நாள் ஆட்டம் தொடங்கும். இருவரும் நிலைத்து நின்று விளையாடினால் இந்தியா 500 ரன்னைத் தாண்ட வாய்ப்புள்ளது.