IND vs PAK: போட்டி ஆரம்பித்ததும் திடீரென பெவிலியன் சென்ற விராட்... என்ன காரணம்?
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்க ஓவரிலேயே பெவிலியனுக்கு திரும்பியன் காரணத்தை இங்கு காணலாம்.
ICC World Cup 2023, IND vs PAK: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் முக்கிய ஆட்டங்களில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் (IND vs PAK) போட்டி இன்று நடைபெறுகிறது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது எனலாம்.
முற்றுப்புள்ளி வருமா?
ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup) வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 1992ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றனர். இதில், இதுவரை 7 போட்டிகளில் இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. எனவே, பாகிஸ்தான் அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வென்று இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவும் தனது ஆதிக்கத்தை தொடர துடிக்கும்.
வரலாறு ஒருபுறம் இருக்க நடப்பு உலகக் கோப்பையில் தலா 2 அணிகளை வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடத்தில் முறையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ளன. எனவே, புள்ளிப்பட்டியலிலும் இந்த போட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடையேதான் அரையிறுதிக்கு செல்ல கடும் போட்டி நிலவும்.
அரையிறுதி ரேஸ்
தற்போது ஆஸ்திரேலியா இரண்டு பெரிய அணிகளுடன் (இந்தியா, தென்னாப்பிரிக்கா) தோல்வியடைந்து தொடரில் பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா தாங்கள் விளையாடிய போட்டிகளில் வென்று டாப்பில் உள்ளனர். அந்த வகையில், அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் வர இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது.
மீண்டும் ஷர்துல்
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், சுப்மான் கில் (Shubman Gill) குணமடைந்துவிட்டதால் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு, கில் அணிக்குள் வந்தார். பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆடுகளம் சுழலுக்கு பெரிதாக சாதகமாக இருக்காது என்பதற்காக அஸ்வினுக்கு இன்றைய போட்டியிலும் ஓய்வளிக்கப்பட்டது. நான்காவது வேகப்பந்துவீச்சாளராக ஷமி உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் தொடர்கிறார்.
பெவிலியன் திரும்பிய விராட்
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெவிலியனுக்கு திரும்பியது, மைதானத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் களத்தில் சுறுசுறுப்பாகவும், துடிப்பாகவும் ஃபீல்ட் செய்யும் விராட் ஏன் உள்ளே போகிறார் என கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய அணி தேசிய கீதம் பாடியபோதும், பந்துவீச்சை தொடங்கியபோதும் விராட் கோலி உலகக் கோப்பையில் பயன்படுத்தப்படாத சாதரண ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதாவது, தோள்பட்டை பகுதியில் மூன்று கோடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஜெர்ஸியை அணிந்திருந்தார். ஆனால், உலகக் கோப்பையில் இந்திய அணி தேசிய கொடியின் மூவர்ணத்தில் அந்த மூன்று கோடுகள் இருக்கும் ஜெர்ஸியைதான் அணிந்து விளையாடுகின்றனர்.
தேவையில்லாத சர்ச்சையை தவிர்க்க...
விராட் கோலி தவறுதலாக பழைய ஜெர்ஸியை அணிந்துவந்த நிலையில், அதை உடனே சென்று மாற்றிக்கொண்டு மீண்டும் களம் கண்டார். இதனை சமூக வலைதளப்பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன. தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க விராட் கோலி உடனடியாக பெவிலியன் திரும்பியதாகவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ