இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. 



நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.


இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் நாள் மெல்பர்ன் மைதானத்தில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 169.4 ஓவர்கள் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து ஆட்டத்தினை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்தியா தரப்பில் புஜாரா 106(319), விராட் கோலி 82(204) ரன்கள் குவித்தனர். 


இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸி., தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹரிஸ், அரோண் பின்ச் ஆகியோரை களமிறக்கியது. இரண்டாம் நாள் முடிவடைந்த நிலையில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் குவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை துவங்கிய ஆஸி., வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 66.5 பந்துகளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆஸி., தரப்பில் ஹாரிஸ், டிம் பெயின் தலா 22 ரன்கள் குவித்தனர். சுமார் 292 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸி., இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட கோரியது.


இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா தரப்பில் மயங்க் அகர்வால் 28*(79) குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இவருக்கு துணையாக ரிஷாப் பன்ட் 6(12) ரன்களுடன் களத்தில் உள்ளார். அணித்தலைவர் விராட் கோலி 0(4) ரன்களில் வெளியேற, அவருக்கு துணையாக துணைத்தலைவர் ரஹானே 1(2) ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.


தற்போதைய நிலவரப்படி இந்தியா ஆஸி., அணியை விட 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.