சேப்பாக்கத்தில் வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா... புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?
IND vs AUS: உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
World Cup 2023, IND vs AUS: உலகக் கோப்பை தொடர் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில், நடப்பு தொடரின் 5ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கில்லுக்கு உடல்நலக்குறைவு காரணமாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஜடேஜாவின் ஜாலம்
இந்திய அணியின் சிறப்பான சுழற் தாக்குதலால் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஹர்திக் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குறிப்பாக ஜடேஜா ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி என மிடில் ஆர்டரின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன்பின் பேட்டிங் செய்ய வந்த இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷன் ஸ்டார்க்கிடமும், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக்-அவுட்டானார்கள். இதனால், இந்தியா 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.
மேலும் படிக்க | சேப்பாக்கத்தின் கில்லி ஜடேஜா... அவரிடம் அதிகமுறை ஆட்டமிழந்தவர் யார் தெரியுமா...?
165 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி - கே.எல். ராகுல் ஜோடி இந்தியாவின் ஸ்கோரை மிக மிக நிதானமாக உயர்த்தினர். சிங்கிள்ஸ், டபுள்ஸ் என தட்டி தட்டி ரன்களை எடுத்து ஒரு வழியாக அழுத்தத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் தட்டிவிட்டது. குறிப்பாக, ஆடம் ஸாம்பா வீசிய அவரது முதல் ஓவரில், கே.எல். ராகுல் மூன்று பவுண்டரிகளை அடித்து அவரை மிரட்டினார். இருவரும் அரைசதம் கடந்த பின்னர், ஒருகட்டத்தில் அவர்கள் இலக்கை நோக்கி வேகம் எடுக்க தொடங்கினர்.
விராட் கோலி 85 ரன்களை எடுத்தபோது, ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அவர் அந்த 85 ரன்களையும் 116 பந்துகளில் வெறும் 6 பவுண்டரிகளுடன் அடித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கோலி - ராகுல் நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆட்டநாயகன் கே.எல். ராகுல்
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, ராகுலுடன் சேர்ந்து இலக்குக்கு இன்னும் வேகமாக நெருங்கினார். அதன்படி, பாட் கம்மின்ஸ் வீசிய 42ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து ராகுல் வெற்றியை உறுதி செய்தார். அதன்மூலம், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 52 பந்துகள் மீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 97 ரன்களை அடித்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
புள்ளிப்பட்டியல்
புள்ளிப்பட்டியலில் இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து அணிகள் முறையே 6,7,8,9, 10ஆவது இடத்தை பிடித்துள்ளன.
மேலும் படிக்க | யோவ் மிலிட்ரி நீ எங்க இங்க... சேப்பாக்கம் மைதானத்தில் ஓடி வந்த ஜார்வோ - யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ