ஒருநாள் போட்டிகளில் 26-வது சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித் ஷர்மா!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 26-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார் இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா!
புதுடெல்லி: உலக கோப்பை 2019 தொடரின் 40லீக் ஆட்டத்தில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 26-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார் இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 40-வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 26-வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
முன்னதாக நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா இறுதி வரை நின்று விளையாடி 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 நான்குகள் அடங்கும். நடப்பு உலக கோப்பை தொடரில் தனது முதல் சதத்தினை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பூர்த்தி செய்த ரோகித், இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் 16 அன்று நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 140(113) ரன்கள் குவித்து தனது இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்தார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 102(109) ரன்கள் குவித்து, நடப்பு தொடரில் 3-வது சதத்தினை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில், இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 26-வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். இந்த சதத்தை 90 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். அதில் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரி அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 104(92) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 207 இன்னிங்சை விளையாடி உள்ள ரோஹித் சர்மா 3 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ரோகித் ஷர்மா அதிக ஒருநாள் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாம் இடத்தில் 41 சதங்களுடன் விராட் கோலியும் உள்ளனர்.
மேலும் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக இலங்கை வீரர் குமார சங்கரகாரா 4(7 இன்னிங்ஸ்) சதம் அடித்து, இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.