தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற BCCI-ன் கோரிக்கையை ஏற்க ICC மறுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனவும், இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ICC இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.


காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலையடுத்து ICC அமைப்புக்கு BCCI கடிதம் எழுதியது. இந்த கடிதத்தில் "தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், ஊக்குவிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.


எனினும் கடிதத்தில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அணியின் பெயரை BCCI குறிப்பிடவில்லை.


இந்நிலையில், BCCI எழுதிய கடிதம் குறித்த விவகாரம் துபாயில் நேற்று நடைப்பெற்ற ICC பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 


கூட்டத்தில் BCCI அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த ICC, கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்களுக்கு இடையிலான நட்புறவை பேணிக்கொள்வதிலும், உறவை துண்டிப்பதிலும் தங்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.  BCCI கோரிக்கை ஏற்க முடியாது என மறுத்துவிட்டனர்.


வரும் ஜூன் 16-ஆம் நாள் ஓல்டு டிராபோர்ட் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியாவும் - பாகிஸ்தானும் மோத உள்ளன. ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்று பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.