ஐபிஎல் 2017: மும்பைக்கு பதிலடி கொடுத்து ஹாட்ரிக் வெற்றி பெறுமா டெல்லி
இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி கண்டிருக்கும் டெல்லி அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் ஐதராபாத் எதிராக 186 ரன்கள் மற்றும் குஜராத்துக்கு எதிராக 209 ரன்கள் இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றது. குறிப்பாக இளம் வீரர்கள்(ரிஷப் பந்த், சாஞ்சு சாம்சன்) பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
டெல்லி அணியின் முன்பு கடும் சவால்கள் காத்திருக்கின்றன. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சி உள்ள 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் கால்பதிக்க முடியும்.
டெல்லி அணி ஏற்கனவே நடந்த லீக்கில் 14 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று இருந்தது. அதற்கு தங்களது சொந்த ஊரில் பதிலடி கொடுக்குமா? என்பதே டெல்லி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டத்தில், 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் அந்த அணி சசிறப்பாக விளையாடி புள்ளிபட்டியலில் முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.