ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது புனே
நேற்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டது.
அதிகபட்சமாக அக்சார் பட்டேல் 22 ரன்னும், சகா 13 ரன்னும், ஷேன் மார்ஷ் மற்றும் ஸ்வாப்னில் சிங் தலா 10 ரன்களும் எடுத்தனர். புனே அணியில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், உனத்கட் மற்றும் ஆடம் சம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான திரிபாதி 20 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ரகானே உடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.
இதனால் புனே அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரகானே 34 பந்தில் 34 ரன்களுடனும், ஸ்மித் 18 பந்தில் 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 14 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று புனே அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.