IPL 2020: 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது..!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது..!
துபாயில் நடைபெற்று வரும் 2020 IPL தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது மும்பை.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர். முந்தைய போட்டியில் சிறப்பாக ஆடிய டி காக் இந்தப் போட்டியில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்து இருந்தார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடினார். அதிரடியாக ஆடினாலும் விக்கெட்டை தற்காத்துக் கொண்டார்.
ALSO READ | IPL 2020: 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் போராடி தோற்ற CSK..!
பொல்லார்டு இடத்தில் பேட்டிங் செய்ய வந்த க்ருனால் பாண்டியா நிதான ஆட்டம் ஆடி 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவ் கடைசி வரை களத்தில் நின்று 79 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேதியா மட்டுமே ஓரளவு கட்டுக்கோப்பாக வீசி இருந்தனர். அறிமுக வீரர் கார்த்திக் தியாகி ஓரளவு ஈர்த்தார்.
அடுத்து 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ட்ரென்ட் போல்ட் - பும்ரா வேகப் பந்துவீச்சு ஜோடி பெரும் அதிர்ச்சி அளித்தது. முதல் 3 ஓவர்களில் போல்ட் 2, பும்ரா 1 விக்கெட் சாய்த்தனர். ஜெய்ஸ்வால் 0, ஸ்மித் 6, சஞ்சு சாம்சன் 0 என வரிசையாக ஆட்டமிழந்தனர். அடுத்து லோம்ரார் 11, டாம் கர்ரன் 15, ராகுல் திவேதியா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர், பட்லர் மட்டுமே தனியாக போராடி 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி வெற்றிக்கு அருகேயே செல்லவில்லை.
ஆர்ச்சர் அதிரடியாக 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தாலும் அந்த அணி தோல்வியை நோக்கி சென்றது. 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.