IPL 2021, CSK vs KKR: ஹாட்ரிக் வெற்றி, 18 ரன்கள் வித்தியாசத்தில் CSK அபார வெற்றி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IPL 2021, CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இந்த IPL பதிப்பில் தனது நான்காவது போட்டியை ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். பேட் கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரில் டு பிளெஸ்ஸி 1 பவுண்டரி, ருதுராஜ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தனர். 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்ஸியும் (Faf du Plessis) அரைசதத்தை எட்டும் நேரத்தில் வருணிடம் விக்கெட்டை இழந்தார் ருதுராஜ். 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அதே ஓவரில் பவுண்டரி அடித்த டு பிளெஸ்ஸி 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி 16-வது ஓவரிலேயே சென்னை அணி 150 ரன்களைக் கடந்தது.
நரைன் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்த மொயீன் அலி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். பின்னர் டு பிளெஸ்ஸியுடன் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைந்தார். 19-வது ஓவரில் டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ரன்களைத் தொட்டது. அதே ஓவரின் கடைசி பந்தில் தோனி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டு பிளெஸ்ஸி 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.
120 பந்துகளில் 221 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்த கொல்கத்தா (Kolkata Knight Riders) அணி களமிறங்கியது. 221 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, அதன் முன்னணி வீரர்களை பறி கொடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிதீஷ் ராணா, சுப்மான் கில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ஈயோன் மோர்கன், சுனில் நரைன் ஆகியோரும் ஒரு சில ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களம் கண்ட தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி விக்கெட் சரிவை தடுத்தது. நிதானம் ஆட்டத்தை தொடர்ந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட முயற்சித்து நிகிடி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி 40 ரன்களுடன் வெளியேறினார்.
சாம் குர்ரன் வீசிய 16 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த கம்மின்ஸ், அடுத்த பந்தில் பவுண்டரியை ஓடவிட்டார். சாம் குர்ரன் வீசிய இறுதி பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த கம்மின்ஸ் அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை சேர்த்தார். கொல்கத்தா அணி ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 18 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற 12 பந்துகளில் 28 ரன்கள் தேவையாக இருந்தது. சாம் குர்ரன் வீசிய 18.3 ஓவரில் வருண் பூஜ்ஜிய ரன்களுடன் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR