IPL 2023: ரிங்கு சிங்கின் அன்றைய வெறியாட்டத்திற்கு பழிதீர்த்தது குஜராத்... வெற்றியை பெற்று தந்த தமிழக வீரர்!
IPL 2023 KKR vs GT: ஐபிஎல் லீக் போட்டியில், கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
IPL 2023 KKR vs GT: நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யத்திற்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று மாலை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கொல்கத்தா அணி, நடப்பு சாம்பியன் குஜராத் உடன் மோதியது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில், ஜேசன் ராய்க்கு பதிலாக குர்பாஸ், ஜெகதீசனோடு ஓப்பனிங்கில் களமிறங்கினார்.
3ஆவது பேட்டராக ஷர்துல் தாக்கூர்
ஜெகதீசன் 19 ரன்கள் எடுத்து பவுர்பிளே ஓவரிலேயே ஆட்டமிழக்க ஷர்துல் தாக்கூரை மூன்றாவது வீரராக கேகேஆர் களமிறக்கியது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர் டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயரும் 11 ரன்களில் வெளியேறினார்.
மேலும் படிக்க | IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் எடுத்த 5 அணிகளின் ரன்கள்
கேப்டன் நிதிஷ் ராணா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 88 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. குர்பாஸ் மட்டும் அதிரடி காட்டி அரைசதம் கடந்தார். குர்பாஸ் - ரிங்கு சிங் கூட்டணி சுமார் 5 ஓவர்களுக்கு நீடித்த நிலையில், அந்த ஜோடி 47 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்தது. குர்பாஸ் 39 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஸ்ஸலின் அதிரடி
சில ஓவர்களிலேயே ரிங்கு சிங்கும் 19(20) ரன்களில் வெளியேறினார். இறுதியில் ரஸ்ஸல் 19 பந்துகளில் 34 ரன்களை குவிக்க கேகேஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது. ஷமி 3 விக்கெட்டுகளையும், லிட்டில், நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆச்சர்யப்படும் விதமாக ரஷித் கானின் நான்கு ஓவர்களில் மொத்தம் 54 ரன்கள் எடுக்கப்பட்டது. அவர் விக்கெட் எதும் வீழ்த்தவில்லை.
தொடர்ந்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத்திற்கு நிதான தொடக்கமே கிடைத்தது. சாஹா 10(10), பாண்டியா 26(20) ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டம் ஆடிய கில் 49(35) ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். இதையடுத்து, 12ஆவது ஓவரில் விஜய் சங்கர் உடன் ஜோடி சேர்ந்தார், மில்லர்.
சங்கர் - மில்லர் ஜோடி
இதில், விஜய் சங்கர் சிக்ஸர்களாக பறக்கவிட ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. மில்லர் அவருக்கு துணையாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளை அடிக்க 17.5 ஓவர்களிலேயே குஜராத் அணி இலக்கை அடைந்து தொடரில் தங்களின் 6ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 51 ரன்களுடனும், மில்லர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக லிட்டில் தேர்வானார்.
புள்ளிப்பட்டியல்
மேலும், குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி (6 வெற்றி, 3 தோல்வி) 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. கொல்கத்தா அணி அணி 9 போட்டிகளில் (3 வெற்றி, 6 தோல்வி) 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ