IPL 2023: 1000ஆவது போட்டியில் மும்பை சாதனை வெற்றி... சச்சின் ஹேப்பி அண்ணாச்சி!
IPL 2023 MI vs RR: ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை அணி வெற்றிபெற்றது.
IPL 2023 MI vs RR: நடப்பு ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி இன்று எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணி என்றாலே, பட்லர் பொளந்து எடுப்பார் என பொதுவாக ரசிகர்கள் நினைக்கும் வேளையில், மாறாக ஜெய்ஸ்வால் இம்முறை அதிரடி ஆட்டத்தை ஆடினார். பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை ராஜஸ்தான் எடுத்தது.
ஜெய்ஸ்வால் ஒருபுறம் அதிரடி காட்ட பட்லர் 18(19), சஞ்சு சாம்சன் 14(10), படிக்கல் 2(4), ஹோல்டர் 11(9), ஹெட்மயர் 8(9), ஜூரேல் என சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் அஸ்வின் துணை நிற்க, ஜெய்ஸ்வால் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவுசெய்தார்.
ஜெய்ஸ்வால் சாதனை
அவர் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 124 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவர் பவுண்டரிகள் மூலமாகவே 112 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சீனியர் இந்திய அணியில் இடம்பிடிக்காத இந்திய வீரர் (Uncapped) ஒருவரின் அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும். இதன்மூலம், ராஜஸ்தான் அணி மும்பைக்கு 212 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மும்பை தரப்பில், அர்ஷத் கான் 3, பியூஷ் சாவ்லா 2, ஆர்ச்சர், மெரிடித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சொதப்பிய ரோஹித்
இமாலய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு, ரோஹித் மீண்டும் சொதப்பினார். அவர் 2ஆவது ஓவரிலேயே ஆட்டமிழக்க, இஷானுடன் ஜோடி சேர்ந்து கிரீன் பொறுப்பான ஆட்டத்தை ஆடினார். கிஷான் 28(23) ஆட்டமிழக்க, கிரீன் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து, சூர்யகுமார் அவருடைய ஸ்டைலில் முதல் பந்திலேயே பைன்லெக் திசையில் முட்டிப்போட்டு சிக்ஸர் அடித்து அசத்தினார்.
சூர்யகுமார் வெறியாட்டம்
அவரும் விரைவாக ரன்களை குவிக்க தொடங்கிய நிலையில், கிரீன் 44(26) ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து, பவுண்டரிகளை குவித்த சூர்யகுமார் அரைசதம் கடந்தார். திலக் வர்மாவும் அவருக்கு கைக்கொடுத்தார். 16ஆவது ஓவரில், போல்ட் பந்துவீச்சில் சூர்யகுமார் 55(29) ரன்களில் ஆட்டமிழக்க டிம் டேவிட் உள்ளே வந்தார்.
தெறிக்கவிட்ட டிம் டேவிட்
மும்பை அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19ஆவது ஓவரில் டிம் டேவிட் தலா ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். 17 ரன்களை எடுக்க மும்பை சிரமப்படும் என நினைத்த வேளையில், டிம் டேவிட் முதல் மூன்று பந்துகளிலேயே தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்துகொடுத்தார்.
இதன்மூலம், மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து மும்பை சாதனை படைத்தது. ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வானார்.
புள்ளிப்பட்டியல்
மும்பை அணி தற்போது 8 போட்டிகளில் விளையாடி (4 வெற்றி, 4 தோல்வி) 8 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 4 தோல்வி) 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ