IPL 2023 RR vs PBKS: ஓப்பனரான அஸ்வின்... பட்லருக்கு என்ன ஆச்சு?
IPL 2023 Jos Butler: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் பட்லருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.
IPL 2023 Jos Butler: நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், கடந்த முறை இரண்டாம் இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியில், ஹைதராபாத்தை எளிதாக வென்ற ராஜஸ்தான் அணிக்கு பஞ்சாப்பின் தொடக்கமே பெரும் தலைவலியாய் இருந்தது.
தவாண் தொடக்கத்தில் சற்று பொறுமை காக்க, பிரப்சிம்ரன் சிங் பட்டாசாய் வெடித்தார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் குவித்து அரைசதம் கடந்தார். இருப்பினும், 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த அதிரடி பனுகா ராஜபக்சே 1 ரன் எடுத்திருந்தார். அப்போது, ஷிகர் தவாண் பவுண்டரிக்கு அடித்த பந்து, மறுமுனையில் இருந்து ராஜபக்சேவின் முழுங்கையில் பலமாக தாக்கியது. மேலும், வலியால் துடித்த அவர், காயம் காரணமாக 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.
மேலும் படிக்க | சிஎஸ்கேயிடம் தோல்வியடைந்த பிறகு லக்னோ அணியில் பெரிய மாற்றம்! திரும்பிய அதிரடி வீரர்
இதையடுத்து, ஜித்தேஷ் சர்மா சிறிதுநேரம் தாக்குபிடித்து 27 (16) ரன்களை குவித்த நிலையில், அவரும் சஹாலிடம் வீழ்ந்தார். சிக்கந்தர் ராசாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ரன்களை குவித்த ஷிகர் தவாண் அரைசதம் கடந்தார். மேலும், கடைசி ஓவரில் ஷாருக்கான் சிக்ஸர் அடிக்க முயன்ற நிலையில், அதனை பட்லர் ஓடிவந்து பிடித்தார்.
கேட்ச்சை வெற்றிகரமாக பிடித்தாலும் பட்லரின் கையில் காயம் ஏற்பட்டது. அந்த ஓவர் முடிவதற்கு இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில், கேட்ச் பிடித்த கையோடு பட்லர் பெவிலியன் திரும்பினார். இதனால், ராஜஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களுக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது. ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்த ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. அப்போதுதான் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில், ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி களமிறங்கி பவர்பிளேயில் 85 ரன்களை குவித்து மிரட்டியிருந்த நிலையில், இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுடன், அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கினார்.
பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என கூறப்பட்டது. இதனால், ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு எனவும் பேசப்பட்டது. அப்போது, ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த வெளியேற, மூன்றாவது வீரராக பட்லர் களமிறங்கி அனைவருக்கும் ஆறுதல் அளித்தார்.
இருப்பினும், அவரின் விரலில் ஏற்பட்ட காயம் அவருக்கு உறுத்தலாக இருந்ததாகவே தெரிந்தது. சாம் கரன் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாம் பந்தில், பட்லர் 5 ரன்களை எடுத்திருந்தபோது, பவுண்சரை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, ஹர்பிரீத் பிரர் தவறவிட்டார். அந்த ஷாட்டை அடித்தபோது, அவரின் இடதுகையில் வலியிருப்பது போன்று தெரிந்தது. இருப்பினும், அதற்கு அடுத்த பந்தே, ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்து மிரட்டினார்.
இதையடுத்து, நாதன் எல்லீஸ் வீசிய 6ஆவது ஓவரில் நான்காவது பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் அணி 6 ஓவர்களில், 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ