வாழ்வா சாவா ஆட்டத்தில் கோலி மிரட்டல் சதம்.. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா ஆர்சிபி?
IPL 2023 RCB vs GT: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆர்சிபி 197 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி கடைசி வரை போராடி 101 ரன்களை குவித்தார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
IPL 2023 RCB vs GT: நடப்பு தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி ஏற்கெனவே முதலிடத்தில் இருக்கும் நிலையில், பெங்களூருவுக்கு இந்த போட்டி வாழ்வா சாவா ரகம் தான். இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளேஆப் செல்ல முடியும் என்பதால், வழக்கத்தை விட போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்றது எனலாம்.
போட்டியில் டாஸை வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணிக்கு டாஸ் இழந்தது சற்று பின்னடைவாகவே காணப்பட்டது. மழை பெய்திருந்த காரணத்தால் போட்டி சுமார் 1 மணிநேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும், ஓவர்கள் குறைக்கப்படாமல் முழுமையாக 20 ஓவர்கள் வரை பந்துவீசப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடந்த முந்தைய போட்டியில் மும்பை வென்றதால், ஆர்சிபி மீது டபுள் அழுத்தம் குவிந்தது எனலாம்.
அந்த அழுத்தத்தில் பெங்களூருவின் ஆஸ்தான ஓப்பனர்களான விராட் கோலி - டூ பிளேசிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி வழக்கம்போல் முதலில் பதுங்கி, அதன்பின் பாய்ந்தது எனலாம். ஷமியின் ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து டூ பிளேஸிஸ் அசத்த, யாஷ் தயாள் ஓவரில் மூன்று பவுண்டரிகளை விரட்டி விராட்டும் அதிரடி காண்பித்தார். அடுத்து ரஷித் கான் ஓவரில் 15 ரன்களை குவித்து அந்த ஜோடி நங்கூரமாக பார்டனர்ஷிப் அமைத்தது.
மேலும் படிக்க | 2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்
இந்த ஜோடியை 8ஆவது ஓவரில் நூர் அகமது பிரித்தார். டூ பிளேசிஸ் 28
(19) ரன்களில் ஆட்டமிழந்தார், அதில் 5 பவுண்டரிகள் அடக்கம். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஆரம்பத்தில் சிக்ஸர், பவுண்டரி என அடித்தும் ரஷித் கான் ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 5 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என 11 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து வந்த லோம்ரோர் 1 ரன்னில் ஸ்ட்ம்பிங் ஆகி வெளியேறினார்.
ஆனால், அடுத்து வந்த பிரேஸ்வெல் விக்கெட்டை இழக்காமல் விராட் கோலிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த ஜோடி 37 ரன்களை குவித்தபோது, பிரேஸ்வெல் 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் என 26 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் ஆகி வெளியேறி மீண்டும் ஏமாற்றமளித்தார். அரைசதம் கடந்த பின் விராட் கோலி சற்று விரைவாக குவித்தார். அனுஜ் ராவத்தும் அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
கடைசி 20ஆவது ஓவரின்போது, கோலி தனது 7ஆவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்தார். அனுஜ் ராவத் கடைசியில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை குவிக்க 20 ஓவர்களில் 5 ரன்களை இழந்து 197 ரன்களை குவித்தது. நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தல 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த சதத்தின் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை அடித்த பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி தற்போது பெற்றுள்ளார். கெயில் 6, பட்லர் 5 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IPL 2023: சென்னை அணி அபார வெற்றி - மாஸா...கிளாஸா பிளே ஆஃப்-க்கு தகுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ