INDvsRSA: 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி விஷாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 215(371), ரோகித் ஷர்மா 176(244) ரன்கள் குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் அதிகப்பட்சமாக டீக் இக்ளர் 160(287), குவின்டன்-டி-காக் 111(163) ரன்கள் குவித்தனர்.
71 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக ரோகித் ஷர்மா 127(149) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக புஜாரா 81(148) ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 393 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழக்க துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த மொகமது ஷமி மற்றும் ரவிந்திர ஜடேஜா முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட், இரண்டாம் இன்னிங்ஸில் 1 விக்கெட் என 8 விக்கெட் குவித்த அஸ்வின் அணியின் வெற்றி கொண்டாட்டத்தை பகிர்ந்துக்கொண்டார். இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.