ஹர்ஷலின் வேகத்தில் வீழ்ந்த மும்பை! ஆர்சிபி அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2021 ன் 39வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்த போட்டி மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடந்தாலும் கோலி vs ரோஹித் சர்மாவுக்கு இடையே நடக்கும் போட்டியாகவே ரசிகர்கள் பார்த்தனர்.
முதலில் பேட்டிங் ஆடிய ராயல் சேலஞ்ச் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் படிக்கல் ரன் எதுவும் இன்றி வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் பரத் கூட்டணி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி மும்பை அணியின் பவுலர்களை துவம்சம் செய்தார். இருவரும் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வல் தனது ஸ்டைலில் சிக்சர்களை விளாசி அரை சதம் அடித்தார். இதனால் ஆர்சிபியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே சென்றது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. மும்பை அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன்பின் களமிறங்கிய மும்பை அணியின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. ரோகித் சர்மா 43 ரன்கள், டிகாக் 24 ரன்களிலும் வெளியேறினர். அதன்பின் இறங்கிய அனைத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள். போட்டியின் திருப்புமுனையாக 16வது ஓவர் அமைந்தது. ஹர்ஷல் பட்டேல் இந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொலார்ட், ராகுல் சஹர் என மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.
18.1 ஓவரில் மும்பை அணி தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியின் சார்பில் ஹர்ஷல் படேல் 4, சாஹால் 3, மேக்ஸ்வெல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் முடிவின் மூலம் மும்பை அணி மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப்பிற்க்கு தகுதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR