உணவில் ஊக்கமருந்தை கலந்தவர் யார் என்று தெரியும் நார்சிங் யாதவ்
என்னுடைய உணவில் ஊக்கமருந்தை கலந்தவர் யார் என்பதை கண்டுபிடித்து விட்டேன். மேலும் இதைப்பற்றி போலீசில் புகார் கொடுத்து உள்ளேன் என்று நார்சிங் யாதவ் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதனால் இடைநீக்கம் செய்யப்பட்ட நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘தான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரி உள்பட ஒரு சிலரின் சதி காரணமாக தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது’ என்று நார்சிங் யாதவ் குற்றம்சாட்டினார். இப்பிரச்சனை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
நார்சிங் யாதவ்விற்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அதிக நாட்கள் நாம் காத்திருக்க முடியாது, எனவே போட்டியில் கலந்துக் கொள்ள பிரவீன் ராணாவின் பெயரை இந்திய மல்யுத்த சம்மேளம் அனுப்பி உள்ளது. நார்சிங் யாதவ்விற்கு பிற வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் “என்னுடைய உணவில் ஊக்கமருந்தை கலந்தவர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டேன், போலீசில் புகார் அளித்து உள்ளேன்,” என்று கூறிஉள்ளார்.