இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இல்லை?
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் வீரேந்திர சேவக்கிற்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், இதில் 6 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. இதையடுத்து, விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
இந்த நேர்காணலில் ரவிசாஸ்திரி, சேவக், டாம் மூடி, ரிச்சர்ட்ஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டனில் இருக்கும் சச்சின் ஸ்கைப் மூலம் நேர்காணலில் கலந்து கொண்டார்.
நேர்காணலில் கலந்து கொண்ட சேவக்கிடம் 2 மணி நேரம் நேர்காணல் நடந்தது.
கோலியுடன் மிக நெருக்கமாக உள்ள ரவிசாஸ்திரி அடுத்த பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சேவக் வரதான் அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.