சிஎஸ்கேவில் ரோஹித் சர்மா...? முன்னாள் வீரர் போட்ட பரபரப்பு போட்டோ!
Rohit Sharma IPL News: ரோஹித் சர்மா சிஎஸ்கே ஜெர்ஸியில் இருக்கும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் பதவிட்டுள்ளார்.
Rohit Sharma IPL News: மும்பை இந்தியன்ஸ் அணியை (Mumbai Indians) சுற்றிதான் தற்போது கிரிக்கெட் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டு முதல் நான்கு சீசனில் கோப்பையை தொட்டுக்கூட பார்க்காத மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013ஆம் ஆண்டில் கோப்பையை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி அதில் இருந்து மொத்தம் 5 கோப்பைகளை வெல்லவும் ஒரு கேப்டனாக 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை ஒரே நாளில் சாதாரண பேட்டராக்கிவிட்டது எனலாம்.
வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் (IPL 2024) மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார். ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) கண்டுபிடித்து 2015இல் வாய்ப்பு வழங்கியது மும்பை இந்தியன்ஸ் அணிதான். அதில், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக வலுபெற்று, அதன்மூலம் இந்திய அணிக்குள் நுழைந்து அதிலும் சிறப்பாக செயல்பட்டு தற்போது டி20 அணிக்கு கேப்டனாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் ஹர்திக் பாண்டியா. குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்றுகொடுத்தார், இந்த 2023ஆம் ஆண்டு சீசனிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.
ரசிகர்களின் எதிர்ப்பு
ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர், சிறந்த கேப்டன் என்பதில் மாற்று கருத்தில்லை என்றாலும், ஒரு அணியை வளர்த்தெடுத்து அதை 5 முறை சாம்பியனாக்கி ரோஹித் சர்மாவை (Rohit Sharma) திடீரென தூக்கிவிட்டு ஒருவரை அதில் பொருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் இதில் தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியை தீயில் இட்டு எரிப்பது, சமூக வலைதள கணக்குகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களை Unfollow செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யகுமாரின் ஹார்ட் பிரேக் பதிவும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
சிஎஸ்கேவில் ரோஹித் சர்மா?
அந்த வகையில், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி வீரரும், மூத்த பேட்டருமான பத்ரிநாத் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பலரும் அதில் தங்களின் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். பத்ரிநாத் அவரது X பக்கத்தில் ரோஹித் சர்மா மஞ்சள் நிற சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸியில் இருப்பது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு,'இப்படி நடந்தால்... (What If)' என குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர்களை அள்ளிப்போடும் சிஎஸ்கே அணிக்கு ரோஹித் வந்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் பத்ரிநாத் பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் கருத்து என்ன?
அதில், ரசிகர்கள் பலரும் பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும் ரோஹித் சர்மா சிஎஸ்கே வருவது பொருத்தமாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 42 வயதான தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ள நிலையில், 36 வயதான ரோஹித் சர்மா அணிக்கு தற்போது வந்தால் இன்னும் நீண்ட காலம் கேப்டனாக செயல்படலாம் என ரசிகர்கள் அதில் பதிவிட்டு வருகின்றனர்.