இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், ஃபீல்டிங், பவுளிங் புதிய பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் பதவிக்காலம் கடந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு நேர்காணல் நடத்தி இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியை தேர்வு செய்தது.


இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் உள்ளிட்ட துறைகளுக்கான பயிற்சியாளர்களை இந்திய அணியின் தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான குழு இதற்கான தேர்வை நடத்தியது. அதன்படி தற்போது இந்த நேர்காணல் முடிந்து தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது



இந்த புதிய பட்டியலின் படி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ராத்தூர், சஞ்சய் பங்கார், மார்க் ராம்பிரகாஷ் ஆகிய மூவரை பரிந்துரைத்துள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு பரத் அருண், பாராஸ் மாம்பரே மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகிய மூவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்.ஸ்ரீதர், அபேய் ஷர்மா மற்றும் டி.திலிப் ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது


இந்தப் பட்டியலில் இருந்து முதலிடத்தில் உள்ள நபர்களான பரத் அருண், ஆர்.ஸ்ரீதர் மற்றும் விக்ரம் ரத்தூர் ஆகியவர்கள் பந்துவீச்சு. ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகிய இருவரும் ஏற்கெனவே இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக தலைமை பயிற்சியாளராக  ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி 2021-ஆம் ஆண்டு நடைபெறம் டி20 உலக்கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.