சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் - ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்பு
IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். மேலும், வங்கதேசம் அணிக்கு 298 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
India vs Bangladesh 3rdT20: வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி (Team India) 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. சம்பிரதாயமான போட்டி என நினைத்தாலும் இந்திய அணி இந்த போட்டியையும் வென்று வங்கதேசத்திற்கு (Team Bangladesh) எதிராக டெஸ்ட் தொடரை வைட்வாஷ் செய்ததை போன்று, டி20 தொடரையும் வைட் வாஷ் செய்யும் முனைப்பில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு ரவி பிஷ்னோயிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஓப்பனிங்கில் இறங்கினர். சஞ்சு சாம்சன் டஸ்கின் அகமதின் இரண்டாவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது அதிரடியை தொடங்கினார்.
பவர்பிளேவில் அதிரடி
மறுபுறம் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்திற்குள் வந்து சஞ்சு சாம்சன் (Sanju Samson) உடன் இணைந்து அதிரடி காட்ட தொடங்கினார். இந்த இணை வங்கதேசம் அணியின் பந்துவீச்சாளர்களை பாரபட்சம் இன்றி அடித்து ஆடியது. பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் இந்தியா 1 ஓவர்களை மட்டும் இழந்து 82 ரன்களை குவித்தது.
தொடர்ந்து 5 சிக்ஸர்
சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த நிலையில், 10ஆவது ஓவரை ரியாத் ஹைசன் வீச வந்தார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்து சஞ்சுவின் காலில் பட்டுச்செல்ல அந்த பந்தில் ரன் ஓடவில்லை. ஆனால் அடுத்த 5 பந்துகளையும் சஞ்சு சாம்சன் வந்த வேகத்தில் சிக்ஸருக்கு அனுப்பினார். அந்த முதல் பந்தை அவர் சிக்ஸருக்கு அனுப்பியிருந்தால், யுவராஜ் சிங்கிற்கு அடுத்து சர்வதேச டி20இல் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்தவர் என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் அது தவறிவிட்டது.
சஞ்சுவின் முதல் டி20 சதம்
சஞ்சு சாம்சன் மட்டுமின்றி சூர்யகுமாரும் அவரது வழக்கமான அதிரடி பாணியிலேயே விளையாடியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்களை குவித்தது. தொடர்ந்து, ஒரு பவுண்டரை அடித்து 40 பந்துகளில் சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். ஜெய்ஸ்வால், கில் உள்ளிட்ட வழக்கமான ஓப்பனர்கள் இல்லாத நிலையில் இந்த தொடரில் ஓப்பனராக களமிறங்கியிருந்தார் சஞ்சு சாம்சன். முதலிரண்டு போட்டிகளில் அவர் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் கூட இந்த போட்டியில் அனைத்தையும் சேர்த்து அடித்து மிரட்டிவிட்டார் எனலாம்.
சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 11 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் விளாசி 111 ரன்கள் எடுத்தும், சூர்யகுமார் (Suryakumar Yadav) 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களையும் விளாசி 75 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சஞ்சு - சூர்யகுமார் இணை 173 ரன்களை குவித்தது. அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் அதே அதிரடியை தொடர்ந்தனர். ரியான் பராக் 34 (13), ஹர்திக் பாண்டியா 47 (18) ரன்களை எடுத்தனர். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 297 ரன்களை குவித்தது. 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். நேபாளம் அணி, மங்கோலியா அணிக்கு எதிராக 314 ரன்களை கடந்தாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் குவித்திருந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ