ஒரே ஓவரில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர்: VIDEO
டி-20 போட்டியின் கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு விக்கெட் என ஹாட்ரிக் உட்பட ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி பெரும் சாதனையை நடிகை ராதிகாவின் மருமகன் படைத்துள்ளார்
புது டெல்லி: டி-20 போட்டியில் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அபிமன்யு மிதுன் பெற்றுள்ளார். இந்த சாதனையை சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் செய்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் ஹரியானா மோதின. கர்நாடகா அணிக்காக அபிமன்யு மிதுன் விளையாடி வருகிறார். அவர் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் உட்பட ஒரு ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கையின் லசித் மலிங்காவுக்குப் பிறகு டி-20 போட்டிகளில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் மிதுன் பெற்றார். இந்த ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டி-20 போட்டியில் இலங்கை ஜாம்பவான் மலிங்கா, இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்த நிலையில், ஹரியானா அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் மிதுனின் புத்திசாலித்தனமான பந்து வீச்சால் ஹரியானா அணி 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மிதுன் கடைசி ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன்கள் மட்டுமே (1 ஒயட் மற்றும் ஒரு ரன்) கொடுத்தார்.
வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பதிவு செய்வதற்கு முன்பு, மற்ற கர்நாடாக பந்து வீச்சாளர்களைப் போலவே மிதுனுக்கும் ஒரு சாதாரண நாள் தான் இருந்தது. மிதுன் தனது முதல் 3 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் இறுதி ஓவர் மூலம், அவரது புள்ளி விவரங்கள் 5 விக்கெட்டுக்கு 39 ரன்கள் மாறியது.
இவர் தனது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹிமான்ஷு ராணாவை அவுட் செய்தார். அதற்கு அடுத்தடுத்த பந்தில் ராகுல் ட்வாத்தியா, சுமித் குமார், மற்றும் அமித் மிஸ்ரா-வை அவுட் செய்தார். தொடர்ந்து நான்கு விக்கெட்டை பறித்தார். ஐந்தாவது பந்தை எதிக்கொண்ட ஜிதேஷ் சரோஹா ஒரு ரன் எடுத்து தப்பித்தார். கடைசி பந்தை சந்தித்த ஜெயந்த் யாதவின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
அரியானவுக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் மிதுன் ஹாட்ரிக் எடுத்தார். அதன் மூலம் கர்நாடகா கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.