இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர ஓய்வு?
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்!
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களும், 58 டி20 போட்டிகளில் 66 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஒரேயொரு இலங்கை வீரர் நுவான் குலசேகர என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ஒருநாள் போட்டிகளில் 4 அரைச்சதத்துடன் 1327 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குலசேகர, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கையின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைப்பெற உள்ளதாக அறிவித்திருந்தார். வரும் ஜூலை 26-ஆம் நாள் துவிங்கி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடனான தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடருக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் தொடரில் இருந்து விடைப்பெற இருப்பதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று கொழும்பு தாஜ் சமுத்தரா ஹோட்டலில் நடைபெற்றபோது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா, கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான நுவான் குலசேகர விடைப்பெற இருப்பதாகவும், தனக்கு பிரியாவிடைப் போட்டியொன்றில் விளையாட வேண்டி எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.