`அப்படி பாக்காதீங்க...` தோல்விக்கு பின் காவ்யா மாறன் பேசியது என்ன தெரியுமா?
Kavya Maran Video: இறுதிப்போட்டியில் எஸ்ஆர்ஹெச் அணியின் தோல்விக்கு பிறகு அந்த அணியின் வீரர்களிடம் அதன் உரிமையாளர் காவ்யா மாறன் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Kavya Maran SRH Dressing Room Video: 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமான முறையில் தொடங்கிய நிலையில், நேற்று அதே சென்னையில் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. 10 அணிகளும் கடுமையாக மோதிய இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது முறையாக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் எஸ்ஆர்ஹெச் அணி வெறும் 114 ரன்களையே இலக்காக நிர்ணயித்த நிலையில் அதனை 10.3 ஓவர்களிலேயே அடித்து கொல்கத்தா அணி மிரட்டியது எனலாம். மேலும், மூன்றாவது முறையாக தொடரின் மிகுந்த மதிப்பு வாய்ந்த வீரர் விருதை (Most Valuable Player Award) சுனில் நரைன் வென்றார்.
கண்ணீர் விட்ட காவ்யா மாறன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்வி அந்த அணி வீரர்கள், ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது எனலாம். தோல்வியை விட தோல்வியடைந்த விதமே கூடுதல் வலியை ஏற்படுத்தியிருக்கும். தொடர் முழுவதும் தொடர்ச்சியாக அதிரடி பேட்டிங்கை மேற்கொண்ட சன்ரைசர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் இப்படி சொதப்பும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பலரும் சமூக வலைதளங்களின் தங்களின் வருத்தத்தை பதிவு செய்து வந்தனர்.
அதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ காவ்யா மாறன் போட்டி நிறைவடைந்ததும், மைதானத்தில் கண்ணீர் மல்க வீரர்களுக்கு கைத்தட்டிய வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிக பகிரப்பட்டு வருகிறது. பலரும் காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில், தோல்விக்கு பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிரெஸ்ஸிங் ரூம்மில் வீரர்களிடம் காவ்யா மாறன் பேசிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'எல்லோரும் நம்மை பற்றிதான் பேசுகிறார்கள்...'
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில்,"வீரர்களாகிய நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடும் விதத்தை மாற்றியமைத்துள்ளீர்கள், அனைவரும் நம் அணி குறித்துதான் பேசி வருகின்றனர். துரதிருஷ்டமான நாளாக இன்று அமைந்துவிட்டது. என்றாலும் அனைவரும் பேட்டிங்கிலும் பந்துவீசிலும் சிறப்பாக செயல்பட்டீர்கள். மிக்க நன்றி.
கடந்தாண்டு நம் அணி கடைசி இடத்தை பிடித்தாலும் இந்தாண்டு நமக்கு ஆதரவளிக்க பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள் வர காரணம் அவர்களுக்கு உங்கள் மேல் இருந்த நம்பிக்கைதான். எல்லோருமே நம்மைக் குறித்துதான் பேசி வருகின்றனர். கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும், நாம் விளையாடிவந்த ஸ்டைலை குறித்துதான் அனைவரும் பேசப்போகிறார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். " என்றார் காவ்யா மாறன்.
முன்னேற்றம் கண்ட எஸ்ஆர்ஹெச்
காவ்யா பேசிக்கொண்டிருந்த போது அங்கிருந்த வீரர்கள், அணி நிர்வாகிகள் அனைவரும் காவ்யா மாறனை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததை அடுத்து அவர் இவ்வாறு பேசினார்,"ஏன் இப்படி இருக்கிறீர்கள்... ஒன்றும் ஆகவில்லை. நாம் இறுதிப்போட்டியில் விளையாடிக்கிறோம். இதுவும் மற்ற போட்டிகளை போன்று சாதாரணமானதுதான் என நான் கூறவில்லை. இருந்தாலும் மற்ற அனைத்து அணிகளும் இன்று நாம் விளையாடுவதைதான் பார்த்தனர். மிக்க நன்றி, விரைவில் சந்திப்போம்" என பேசி முடித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதற்கு முன் கடைசியாக 2020ஆம் ஆண்டில்தான் பிளே ஆப் வந்தது. அதன்பின் 2021ஆம் ஆண்டு கடைசி இடத்திலும் (8வது இடம்), 2022ஆம் ஆண்டில் 8வது இடத்திலும், 2023ஆம் ஆண்டில் 10வது இடத்திலும் முடித்தது. எனவே, இந்த முறை மினி ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ் என பல முன்னணி வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ