ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் மீது கொலை வழக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் தன்னுடைய பைக்கில் சென்ற போது எதிர்பாராத விதமாக பைக் மண் சறுக்கி தடம் புரண்டு கீழே விழுந்துள்ளது. 


இதில், எதிரே காரில் வந்து கொண்டிருந்த மாரியப்பனின் கார் மீது பைக் மோதியுள்ளது. கார் சேதமடைந்த அந்த நேரத்தில், பைக்கில் வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


இந்த கார் ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனின் கார் என கூறப்படுகிறது.


இந்நிலையில் கார் சேதமடைந்ததால் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் யுவராஜ் மற்றும் சிலர் சதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று காரை சேதப்படுத்திவிட்டாய் என்று மிரட்டியுள்ளனர். அதோடு, அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


இதன் காரணமாக சதீஷ்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


சதீஷ்குமார் இறந்தது குறித்து மாரியப்பன் கூறியதாவது:- 


கடந்த 3நம் தேதி இரவு பெங்களூருவில் பயிற்சியில் இருந்த நான் சொந்த ஊரில் உறவினர் ஒருவர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்தேன்.


ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.20 லட்சம் கொடுத்து புதிதாக வாங்கிய காரை பெரிய வடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தியிருந்தேன்.


அப்போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ்குமார் எனது கார் மீது மோதி விட்டு நிற்காமல்சென்று விட்டார். இதில் எனது கார் கதவின் லாக் உடைந்து விட்டது. இது குறித்து அவரது வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரிடம் கேட்டேன். 


அப்போது அவரது தாய் காரில் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட செலவை நாங்கள் கொடுத்து விடுகிறோம் என கூறினார். பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கார் மீது மோதிய சதீஷ் குமார் நின்று பதில் சொல்லிவிட்டு வந்து  இருக்கலாம் என கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டோம். 


நாங்கள் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் காரில் மோதியதால் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது தொடர்பாக அவரது தாய்க்கும், அவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்து கொண்டிருந்தது. சதீஷ்குமார் குடும்பத்தினருக்கும், எங்களுக்கும் எந்த முன் விரோதமும் கிடையாது.  


மேலும் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதை பயன்படுத்தி சிலர் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். இதை வைத்த என்னை சிக்க வைத்து எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும், எங்களுக்கு வேண்டாத சிலர் தூண்டுதலின் பேரில் பணம்  பறிக்கவும் சிலர் முயற்சிக்கிறார்கள்.  
 
சதீஷ்குமார் ஏற்கனவே காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தவர். இந்நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது எனக்கு தெரியாது. 


இவ்வாறு அவர் கூறினார்.