விஜய் ஹசாரே கோப்பை 2017: 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று விஜய் ஹசாரே இறுதி ஆட்டம் நடந்தது. இதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியும் மோதின. இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்கியது.
முதலில் பேட்டிங்கை செய்த தமிழகம் அணி 47.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தமிழகம் சார்பாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 112 ரன்கள் எடுத்தார்.
வெற்றி பெற 218 ரன்கள் தேவை என்ற இலக்குடன் பெங்கால் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணி 4 ரன்களில் இருந்த போது அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்ந்தது. பெங்கால் அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதிப் சாட்டர்ஜி 58 ரன்கள் எடுத்தார்.
இதனால் தமிழகம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே இரு முறை இறுதிச்சுற்றில் தமிழகத்துடன் மோதியுள்ள பெங்கால் அணி, இரண்டிலுமே தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.