சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணியிடன் வீழ்ந்த போதிலும் ICC தரவரிசையில் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா டெஸ்ட் தொடரினை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடர் தோல்வியை அடுத்து இந்திய அணி மற்றும் அணி வீரர்களின் தரவரிசையில் குறிப்பிடத்தக வீழ்ச்சி நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் செவ்வாய் அன்று உலக கிரிக்கெட் அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தனது முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.


டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையை பொறுத்தவரையில் இந்தியா 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணி 110 புள்ளிகளுடனும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடனும் உள்ளது. அதேவேலையில் இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும் தென்னாப்பிரிக்கா அணி 98 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளது.


நியூசிலாந்திற்கு எதிரான 0-2 எனும் தொடர் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் முதல் தொடர் தோல்வியாகும். இந்த மறக்க முடியாத தோல்வியில் இந்திய கிரிக்கெட் அணி பெரும் சரிவை காணும் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும் அனைத்து எதிர்பார்ப்புகளையும் புறம் தள்ளி இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.


அதேவேளையில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் ப்ளண்டெல் மற்றும் அவரது இந்திய எதிரணியான பிருத்வி ஷா மற்றும் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமீசன் ஆகியோர் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான தொடரில் (நான்கு இன்னிங்ஸ்களில் 117 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ளண்டெல் இந்த அங்கிகாரத்தை பெறுவது வியப்பான விஷயம் அல்ல. அவரது செல்திறனுக்காக அவருக்கு புள்ளிப்பட்டியலில் 27 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். 2018-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிருத்வி ஷா, கிறிஸ்ட்சர்ச் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 54 ரன்கள் எடுத்தார். இந்த செயல்திறன் அவருக்கு சுமார் 16 இடங்கள் முன்னேற்றத்தை பெற்று தந்துள்ளது.


பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா வீர்ர் ஸ்டீவன் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் விராட் கோலி (886 புள்ளிகள்), மூன்றாம் இடத்தில் மார்னஸ் லாபுசாக்னே 827 புள்ளிகளுடனும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே கேன் வில்லியம்சன் (813 புள்ளிகள்) மற்றும் பாபர் ஆஜம் (800 புள்ளிகள்) உள்ளனர்.


இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ஆகியோர் தலா ஒரு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளனர்.


பந்து வீச்சாளர்களில், டிம் சவுதி முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரின் வெற்றியில் அவரது செயல்திறன் அவருக்கு இந்த வெகுமதியை அளித்துள்ளது. அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குத் திரும்பினர். ஆனால் இந்த பட்டியலில் மிகப்பெரிய லாபம் ஈட்டியவர் ஜேமிசன், அவரது செயல்திறனுக்காக 80-வது இடத்திலிருந்து 43-வது இடத்திற்கு முன்னேறினார்.