West Indies vs India 1st Test Highlihts: மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் கடந்த ஜூலை 12ஆம் தேதி தொடங்கியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி நடைபெற்றது. இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளை விளையாட இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, முதலில் டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியின் டாஸை வென்ற கிரேக் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இருப்பினும், அந்த அணி முதல் நாளிலேயே 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி ஏமாற்றமளித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் 47 ரன்களை சேர்த்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


ஓப்பனர்கள் மிரட்டல்


இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. முதல் நாளில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் வரை சேர்த்து, இரண்டாம் நாளிலும் (ஜூலை 13) அதே நேர்த்தியான ஆட்டத்தை கைக்கொண்டது. இதன்மூலம், இருவரும் சதத்தை பதிவு செய்து மிரட்டினர். இருப்பினும், ரோஹித் சர்மா 103 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கில் 6 ரன்களில் வெளியேற, விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். 


மூன்றாம் நாள் ஆட்டம்


இந்த ஜோடியும் இரண்டாம் நாள் முடிவு வரை விக்கெட்டை விடாமல் சிறப்பாக விளையாடியது. அப்போது ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை குவித்தது. ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 30 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 150 ரன்களையும், விராட் அரைசதத்தையும் கடந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும், ஜெய்ஸ்வால் 171 ரன்களில் ஆட்டமிழந்து, அவரின் இரட்டை சத வாய்ப்பை பறிகொடுத்தார். அவர் 387 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகள், 1 சிக்ஸரை அடித்திருந்தார். 


மேலும் படிக்க | முதல் டெஸ்ட் போட்டியிலேயே மகத்தான சாதனைகளை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்


272 ரன்கள் இலக்கு 


அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா களத்திற்கு விராட் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். 182 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளை மட்டும் அடித்திருந்தார். இந்திய அணி 421 ரன்களை எடுத்தபோது டிக்ளர் செய்தனர். ஜடேஜா 37 ரன்களுடனும், இஷான் கிஷன் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கு இந்திய தீவுகள் தரப்பில் இந்த இன்னிங்ஸில் 9 வீரர்கள் பந்துவீசினர். கீமர் ரோச், அல்ஸாரி ஜோசப், ரக்கீம் கார்ன்வால், ஜோமெல் வாரிக்கான், அலிக் அத்தானாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.



ஆதிக்கத்தை தொடர்ந்து அஸ்வின்


இதன்மூலம், 272 ரன்கள் இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களம்கண்டது. இருப்பினும் முதல் இன்னிங்ஸை போலவே அஸ்வின் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணியை நிலைகுலைய செய்தார். இம்முறை அந்த அணி 130 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் அலிக் அத்தானாஸ் அதிகபட்சமாக 28 ரன்களை சேர்த்தார். 



ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்


தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 171 ரன்களை சேர்த்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வானார். மேலும், நட்சத்திர வீரர் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளையும் தகர்த்தார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி டிரினிடாட் மற்றும் டொபாகோவில் அமைந்துள்ள குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 


மேலும் படிக்க | பந்துவீசவில்லை... செங்கல்லை வீசுகிறார் - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் குறித்து கோலி சொன்னது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ