தொடை எலும்பு காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள நிலையில் தற்போது அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லுங்கி நெகிடி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


முன்னதாக வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி தொடை எலும்பு காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே அடுத்து இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஆட்டத்தின் 7-வது ஓவரின் போது காயம் காரணமாக ஓய்வு அறைக்கு சென்ற லுங்கி நெகிடி பின்னர் போட்டியில் இடம்பெறவில்லை. ஆட்டதின் பாதியிலேயே நெகிடி நடப்பு போட்டியில் இருந்து விலகியது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 5-ஆம் நாள் நடைபெறவுள்ள போட்டியில் லுங்கி நெகிடிக்கு பதிலாக டேல் ஸ்டைன் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் ஏதும் வெளியாகவில்லை.


உலக கோப்பை தொடரில் இதுவரை நடைப்பெற்ற இரண்டு போட்டிகளிலும் காயம் காரணமாக விலகி இருந்து ஸ்டைன், தற்போது குணம் அடைந்துள்ளதாகவும் எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளதாகவும் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தற்போது நெகிடியின் வெற்றிடத்தை ஸ்டையின் நிறப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கண்ட தோல்வி மூலம் உலக கோப்பை தொடரில் 2-வது தோல்வியை தென்னாப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. பெரும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா இரண்டு தோல்வியை கண்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.